புதிய தகவல் தொழில்நுட்ப கட்டிட கட்டுமான பணிகளை பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று ஆய்வு செய்தார். 
வணிகம்

“ஜிஎஸ்டி வரி விதிப்பு அடிப்படை திட்டமிடுதலில் தவறு” - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கருத்து

இல.ராஜகோபால்

கோவை: “ஜிஎஸ்டி வரி விதிப்பில் அடிப்படை திட்டமிடுதலில் தவறு உள்ளது. அவற்றை திருத்த மத்திய அரசு முழுமையாக நல்ல மனதோடு ஏற்றுக் கொண்டால் விரைவில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்” என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

கோவை, விளாங்குறிச்சி சாலையில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் ரூ.114.16 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய தகவல் தொழில்நுட்ப கட்டிட கட்டுமான பணிகளை தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று (செப்.26) ஆய்வு செய்தார். தமிழ்நாடு மின்னணு நிறுவனத்திற்காக, பொதுப்பணித்துறை மூலம் புதிய தகவல் தொழில்நுட்ப கட்டிடம் 3.94 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் இரண்டு அடித்தளங்கள், தரைத்தளம் மற்றும் ஐந்து மேல் தளங்களுடன் மொத்தம் 8 தளங்களுடன் 2,7379 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்படுகிறது.

முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் தளங்களில் தகவல் தொழில்நுட்ப அலுவலகத்துக்கான கட்டமைப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளன. அனைத்து பணிகளும் நிறைவடைந்த பின், தமிழக முதல்வர் திறந்து வைக்க உள்ளார். ஆய்வுக்குப் பின் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களிடம் கூறியது: “கடந்த ஆட்சி காலத்தில் கோவையில் தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் அறிவிக்கப்பட்ட கட்டுமான பணிகளில் தாமதம் நிலவிய நிலையில், தொடர் ஆய்வு மேற்கொண்டு துரிதப்படுத்தப்பட்டு தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது. 3,200-க்கும் மேற்பட்டோருக்கு புதிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும்.

கோவை, விளாங்குறிச்சி சாலையில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல வளாகம்

நான் நிதியமைச்சராக இருந்த போது அறிவித்த கோவை, ஒசூர், வடசென்னை உள்ளிட்ட பகுதிகளில் ஹைடெக் சிட்டி அமைக்கும் பணிகளும் நடக்கிறது. தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சிக்கு சில திருத்தங்கள் தேவைப்படுகிறது. அவற்றை முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஜிஎஸ்டி தொடர்பாக நான் முதல் முறையாக கவுன்சிலில் பங்கேற்ற போது, அறிக்கை போல் கடிதத்தை கவுன்சில் மற்றும் நிதியமைச்சருக்கு வழங்கினேன். ஜிஎஸ்டி வரி விதிப்பில் குளறுபடிகள் உள்ளது குறித்து கூறியிருந்தேன்.

சில பொருட்களுக்கு தனியாக விற்றால் ஒரு வகை வரி. சேர்த்து விற்பனை செய்தால் ஒரு வகையான வரி என அடிப்படை திட்டமிடுதலில் தவறு உள்ளது. அவற்றை திருத்த மத்திய அரசு முழுமையாக நல்ல மனதோடு ஏற்றுக்கொண்டால் விரைவில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்” என்றார். ‘எல்காட்’ மேலாண்மை இயக்குநர் கண்ணன், மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்(கண்காணிப்பு) செல்வராஜ் உள்ளிட்ட பலர் ஆய்வின் போது உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT