வணிகம்

தொழில் ரகசியம்: கம்பெனி தடகள வீரர்களுக்கு ஈடு இணை உண்டா?

சதீஷ் கிருஷ்ணமூர்த்தி

டகள மற்றும் விளையாட்டு வீரர்களின் செயல்திறனைப் பார்த்து வியந்திருப்பீர்கள். அவர்கள் உடலமைப்பு, கடும் பயிற்சி, அயராத உழைப்பு, மன திடம், எத்தனை டென்ஷனிலும் அசராமல் செயல்படும் திறன் கண்டு பிரமித்திருப்பீர்கள். அவர்களை விட ஐம்பது மடங்கு அதிக திறனுடன் செயல்படுபவர் உண்டு. நீங்கள் அவரை கவனிப்பதே இல்லை. அவரும் தன்னை கவனித்துக்கொள்வதில்லை. விளையாட்டு வீரர்களை விட தன் திறன், உழைப்பு, செயல்பாட்டை அவரால் மேலும் மெருகேற்ற முடியும்.

அந்த அவர் வேறு யாருமல்ல. சாட்சாத் நீங்கள் தான்!

என்னடா இவன் காக்கா பிடித்து, முகஸ்துதி பாடி கடைசியில் காசு கடன் கேட்டு கையை நீட்டுவானோ என்று கவலைப்படாதீர்கள். அழித்தால் ஐந்து பேர் செய்யக்கூடிய நம் உடல் வாகை கலாய்க்கிறானோ என்ற கோபம் வேண்டாம். தொழிலதிபராய், நிர்வாகியாய் தினம் உங்கள் செயல்திறனிற்கு விடப்படும் சாவல்களை சமாளித்து பணிபுரியும் உங்கள் முன் விளையாட்டு வீரர்கள் எம்மாத்திரம். ஆஞ்சனேயருக்கு தான் தன் பலம் தெரியாது. உங்களுக்குமா? உங்கள் செயல்திறன் வளர்க்கும் விதம் பற்றி பேசுவோம்!

விளையாட்டு வீரர்கள் ஒரு நாளின் ஒரு சிறிய சதவீதத்தை மட்டுமே பயிற்சியிலும் அதை விட சிறிய பகுதியை போட்டிகளில் பங்குபெறவும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் ஒரு நிர்வாகி தினம் பன்னிரண்டு முதல் பதினான்கு மணி நேரம் தன் செயல்திறனை காட்டவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். விளையாட்டு வீரர்களுக்கு வருடத்தில் சில மாதங்கள் ஆஃப் சீசன் என்று ஆடாமல் ஓய்வெடுக்கும் சௌகரியம் உண்டு. நிர்வாகிக்கு வருடம் முழுவதும் சீசன். விளையாட்டு வீரர்களின் career மிஞ்சிப் போனால் பதினைந்து வருடங்கள். ஆனால் நிர்வாகி நாற்பது முதல் ஐம்பது வருடங்கள் உழைக்கிறார்.

இப்பொழுது சொல்லுங்கள், உங்கள் முன் புகழ்பெற்ற தடகள, விளையாட்டு வீரர்கள் எல்லாம் எம்மாத்திரம்? உங்கள் செயல்திறனை மற்றவர் மதிக்காவிட்டால் ஒழிந்து போகிறது, நீங்களே கவனிக்கவில்லை என்றால் எப்படி சார்!

பணி பளுவில் மன அழுத்தத்துக்கிடையில் சிலரால் மட்டும் எப்படி சாதிக்க முடிகிறது என்பதை பல நிபுணர்கள் பல்வேறு ஆய்வுகள் மூலம் விளக்கியுள்ளனர். சிலர் செயல்திறனை அறிவாற்றல் திறனோடு (Cognitive capacity) இணைக்கின்றனர். வேறு சிலர் செயல்திறனை உணர்வுசார் நுண்ணறிவு (Emotional intelligence), ஆன்மீக பரிமாணத்தோடு (Spiritual dimension) மட்டுமே சுருக்கிவிடுகின்றனர். யாருமே உடல்திறனின் (Physical capacity) முக்கியத்துவம் பற்றி சொல்வதில்லை. இன்னும் சொல்லப் போனால் நீடித்த செயல் திறனுக்கு இந்நான்கு காரணிகளையும் கணகச்சிதமாய் கணக்கிட்டு கையிலெடுத்தால்தான் நீடித்த செயல்திறன் பெற முடியும் என்கிறார்கள் `ஜிம் லொஹெர்’ மற்றும் ‘டோனி ஷ்வார்ட்ஸ்’ என்னும் `செயல்திறன் உளவியலாளர்கள்’ (Performance Psychologists). இருபது வருடங்களுக்கும் மேலாக தடகள, விளையாட்டு வீரர்களின் செயல்திறனை கூட்டும் வழிகளை ஆராய்ந்து உலகின் பல தலைசிறந்த வீரர்களை உருவாக்கியவர்கள். விளையாட்டு வீரர்களுக்கு பயன்படும் உத்திகளை, வித்தைகளை கம்பெனி நிர்வாகிகளுக்கும் பயன்படுத்தி அவர்களும் தங்கள் செயல்திறனை வளர்த்துக்கொள்ளும் வழிகளை ‘ஹார்வர்ட் பிசினஸ் ரெவ்யூ’வில் `The Making of a Corporate Athlete’ என்ற கட்டுரையாக எழுதியிருக்கிறார்கள்.

கம்பெனி நிர்வாகிகளை Corporate athletes அதாவது கம்பெனி தடகள வீரர்கள் என்கிறார்கள். நீண்ட காலம் அதிக செயல் திறனோடு பணியாற்ற கம்பெனி நிர்வாகிகள் விளையாட்டு வீரர்கள் போல முறையான பல நிலை பயிற்சிகள் எடுக்கவேண்டும் என்கின்றனர். விளையாட்டு வீரர்களுக்கு தரப்படும் பயிற்சி முறைகளை நுட்பங்களை கம்பெனி நிர்வாகிகளுக்கு அளித்து அவர்கள் செயல்திறன், உடல் ஆரோக்கியம், உள்ளத்தில் மகிழ்ச்சி அனைத்தையும் அதிகரித்து காட்டியிருக்கிறார்கள்.

வீரரின் செயல்பாட்டை நிர்ணயம் செய்யும் உடல், மனம், உணர்வு மற்றும் ஆன்மீகம் ஆகிய நான்கும் ஒன்றின் மீது ஒன்று பின்னிப் பினைந்து செயல்படுகிறது. இதை செயல்பாட்டு கூம்பு (Performance Pyramid) என்கிறார்கள். பிரமிடின் ஒவ்வொரு அங்கமும் மற்றவைகளின் மீது தாக்கத்தை உண்டு செய்கின்றன. நான்கில் ஒன்றை கவனிக்காமல் விட்டாலும் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. நான்கு படிகளின் திறனையும் அதிகரிக்கும் போது தான் விளையாட்டு வீரர்கள் முதல் நிர்வாகிகள் வரை அவர்கள் தங்கள் முழு திறமையை பிரயோகித்து நீடித்த செயல்திறனை காட்ட முடிகிறது. இதை `சிறந்த செயல்திறன் நிலை’ (Ideal Performance State) என்கிறார்கள்.

எனர்ஜி என்பது ஒரு பணியை முடிக்கும் திறன். செயல்திறனை கூட்டும் முயற்சி முதலில் உடலிலிருந்து துவங்கவேண்டும். உடல் தான் எனர்ஜியின் அடிப்படை ஆதாரம். செயல்திறன் பிரமிடின் அடிநாதம். செயல்திறனின் எதிரி மன அழுத்தம் என்று பலர் தவறாக நினைக்கின்றனர். நம் உடல் எனர்ஜியை கூட்ட சிறிய அளவு மன அழுத்தம் அவசியம். ஆனால் அதை மனதில் தேங்கவிடாமல் வெளியேற்றிவிட்டால் அது மனதை ஆட்கொண்டு நம் உடலை சோர்வடைய செய்யாதிருக்கும். டென்னிஸ் ஆடும்போது பாய்ண்டுகளுக்கு இடையே ஆடுபவர்கள் தங்கள் கையிலிருக்கும் டென்னிஸ் பேட்டை பார்த்து அடுத்த பாயிண்டிற்கு ரெடியாவதை பார்த்திருப்பீர்கள். அது ஏன் தெரியுமா? மாட்ச் ஆடும்போது அதிகரிக்கும் மன அழுத்தத்தை விளையாட்டிலிருந்து தங்கள் கவனத்தை ஒரு சில வினாடிகள் விலக்க கையிலிருக்கும் பேட்டைப் பார்த்து அந்த சின்ன கேப்பில் ரிலீஸ் செய்கிறார்கள். அப்படி செய்யும்போது அழுத்தம் மனதில் வளராமல், அதை வெளியேற்றி அடுத்த பாயிண்டிற்கு ரெடியாக முடிகிறது. அவர்கள் செயல் திறனும் கூடுகிறது.

கம்பெனி நிர்வாகிகள் இது போல் மன அழுத்தத்தை வெளியேற்ற தவறுகிறார்கள். அது தினம் உள்ளுக்குள்ளேயே பிறந்து, வளர்ந்து உடலையும் மனதையும் அழுத்தி இம்சித்து பதற்றத்தைத் தான் பரிசாக தருகிறது. பணி பளுவிற்கு நடுவில் கேப் கிடைக்கும் போது சின்ன வாக்கிங் செய்வது, வெளியுலகை பார்த்து கவனத்தை திசை திருப்புவது மன அழுத்தத்தை வெளியேற்ற வழி செய்யும். பணிக்கிடையில் முடிந்தால் உடற்பயிற்சி செய்தாலும் உசிதமே!

சிறந்த விளையாட்டு வீரர்கள் போட்டியிடும் போது தங்கள் செயல்திறன் மனநிலை மிக அமைதியாய், தன்னம்பிக்கை நிறைந்ததாய் இருப்பதாக கூறுகின்றனர். எதிர்மறை உணர்சிகள் எனர்ஜியை வற்றச் செய்துவிடுகிறது. உடற்பயிற்சி இங்கேயும் பயன் தரும். அது முடியாத போது உணர்ச்சிகளை அமைதிப்படுத்த இசை கேளுங்கள். நல்ல இசை மனதை மட்டுமில்லாமல் உடலியல் மீது கூட தாக்கம் உண்டு பண்ணும். கிரிக்கெட் மாட்சுகளின் போது பெவிலியனில் பேடை கட்டிக்கொண்டு அடுத்து உள்ளே நுழைந்து ஆடத் தயாராயிருக்கும் பாட்ஸ்மென் காதில் ஹெட்ஃபோன் மாட்டிக்கொண்டு இசை கேட்பது எதற்கு என்று நினைக்கிறீர்கள்? மன அழுத்தத்தை குறைத்து எதிர்மறை உணர்ச்சிகளை வெளியேற்றி மனதில் பாசிடிவ் எனர்ஜியை உண்டு பண்ணி தன் செயல்திறனை கூட்டத்தான்!

மனதில் கவனச்சிதறல் ஏற்படும் போது எனர்ஜி வீணாக்கப்படுகிறது. விளையாட்டு வீரர்களும், நிர்வாகிகளும் தியானம் செய்து பயின்றால் மன அழுத்தம் நீங்கி கவனம் கூர்மையடையும். ஆபீசில் தியானம் செய்ய கூச்சமாய் இருந்தால் செய்யவேண்டிய பணியை காட்சிப்படுத்திப் (Visualization) மனதிற்குள் பார்க்க பழகுங்கள். அப்படி செய்வது எதிர்மறை எண்ணங்களை நீக்கி தன்னம்பிக்கை தரும். சிட்னியில் நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு சில மாதங்கள் முன் ‘லாரா வில்கின்சன்’ என்ற நீச்சல் வீரர் விபத்துக்குள்ளாகி அவர் வலது கால் முறிந்தது. நீச்சல் பயிற்சியெடுக்க முடியாத நிலை. ஆனாலும் தினம் நீச்சல் குளம் வருவாராம். அங்கு அமர்ந்து தான் எப்படி தண்ணீரில் குதிக்கப்போகிறோம், எப்படி நீந்தப் போகிறோம் என்று மனதிற்குள் காட்சிப்படுத்திப் பார்ப்பாராம். ஒலிம்பிக்ஸிற்கு ஒரு சில வாரங்கள் முன் அவர் கால் கட்டு பிரிக்கப்பட்டு தண்ணீரில் பயிற்சி எடுத்துக்கொள்ள முடிந்தது. சரியான பயிற்சி இல்லாத நிலையிலும் ஒலிம்பிக்ஸில் கலந்துகொண்டவர் உலகம் வியக்கும் வண்ணம் தங்கப் பதக்கம் வென்றார். இதே போல் நிர்வாகிகளும் தொழிலதிபர்களும் முக்கியமான பணிகளை செய்வதற்கு முன் அதை செய்யும் முறையை மனதில் காட்சிப்படுத்திக்கொள்வது அவர்களை அப்பணிக்கு தயார்படுத்தும்.

ஆன்மீகம் என்று சொல்வதால் உங்களை விபூதி இட்டுக்கொண்டு ஐந்து முறை தொழுகை செய்து ஸ்தோத்திரம் சொல்லச் சொல்லவில்லை. ஆன்மீகம் என்பது உங்கள் மனதின் அடிநாதமாய் விளங்கும் விழுமியங்களை வாழ்வின் முக்கிய நோக்கங்களாக நீங்கள் கருதுவதை தட்டி எழுப்பி அதன் மூலம் எனர்ஜி பெறுவது. இது உங்கள் மனதில் புதிய எனர்ஜி தந்து உந்துதல் சக்தியை, ஆழ்ந்த கவனத்தை, மன திடத்தை தருகிறது. தினம் இரண்டு பாக்கெட் சிகரெட் ஊதும் பெண் ஒருவர் கர்ப்பமான போது சிகரெட் பிடிப்பதை நிறுத்தினார்.

குழந்தை பிறந்தவுடன் அப்பழக்கத்தை தொடந்தவர் இரண்டாவது முறை கர்ப்பமான போது மீண்டும் சிகரெட் பிடிப்பதை நிறுத்தினார். எத்தனையோ முயன்றும் சிகரெட் பழக்கத்தை நிறுத்தமுடியாதவர் தாய்மை பருவம் அடைந்தபோது நிறுத்திய காரணம் தன் வாழ்வின் பெரிய நோக்கம் எதுவோ அது அவரை ஆட்கொண்டதால் தானே!

போட்டி நெருக்கித் தள்ளும் உலகமயமான இன்றைய பிசினஸ் சூழலில் நீண்ட காலம் அதிக செயல்திறனுடன் பணியாற்றுவது நாளுக்கு நாள் கடினமாகி வருகிறது. செய்யும் பணிக்கு மட்டும் பயிற்சியளித்தால் பத்தாது. உடல், உணர்வு, மனம் மற்றும் ஆன்மீகத் திறன் வளர்க்கும் வழிகளை ஆராயவேண்டும்.

விளையாட்டு மைதானம் முதல் கம்பெனி போர்ட்ரூம் வரை செயல்திறனை நிர்ணயிப்பது வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்கள் எனர்ஜியை எப்படி புதுப்பித்து மன அழுத்தத்தை எவ்வாறு வெளியேற்றி தங்கள் மனதை, உணர்வை புதுப்பிக்கிறார்கள் என்பதை பொறுத்தே அமைகிறது. அப்படி செய்யும் போது நீங்களும், உங்கள் கம்பெனியும், உங்கள் குடும்பமும் கூட வெற்றியடைகிறது!

satheeshkrishnamurthy@gmail.com

SCROLL FOR NEXT