வணிகம்

கடந்த ஆண்டில் ரூ.1.20 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்த அரசு வங்கிகள்: எஸ்பிஐ வங்கி ரூ.40 ஆயிரம் கோடி

செய்திப்பிரிவு

கடந்த 2017-18-ம் நிதி ஆண்டில் அரசு வங்கிகள் ரூ.1.20 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்துள்ளதாகவும், தனியார் வங்கிகள் ரூ.23,928 கோடி கடன் தள்ளுபடி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒட்டுமொத்தமாக வங்கிகள் சார்பில் கடந்த நிதி ஆண்டில் ரூ.ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 93 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2016-17-ம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்ட தொகையைக் காட்டிலும் 61.8 சதவீதம் அதிகமாகும். 2016-17-ம் ஆண்டில் ரூ.89 ஆயிரத்து 48 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து அரசு மற்றும் தனியார் வங்கிகள் ஒட்டுமொத்தமாக ரூ.4 லட்சத்து 80ஆயிரத்து 93 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் 83.4 சதவீதம் அதாவது, ரூ.4 லட்சத்து 584 கோடி அரசு வங்கிகளால் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தகவல்களை ஐசிஆர்ஏ வெளியிட்டுள்ளது.

இதில் கடந்த ஆண்டு மட்டும் நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி ரூ.40 ஆயிரத்து 281 கோடி கடன் தள்ளுபடி செய்துள்ளது. இதில் கடந்த 10 ஆண்டுகளில் ஸ்டேட் வங்கி மட்டும் ரூ.ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 137 கோடி கடனைத் தள்ளுபடி செய்துள்ளது.

வங்கிமோசடியில் சிக்கிய பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.7 ஆயிரத்து 407 கோடிதள்ளுபடி செய்துள்ளது.

இதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ரூ.10 ஆயிரத்து 307 கோடியும் தள்ளுபடி செய்துள்ளன. பேங்க் ஆப் இந்தியா வங்கி ரூ.28 ஆயிரத்து 68 கோடியும், கனரா வங்கி ரூ.25 ஆயிரத்து 505 கோடியும் தள்ளுபடி செய்துள்ளன.

தனியார் வங்கிகள் கடந்த ஆண்டில் ரூ.23 ஆயிரத்து 928 கோடி தள்ளுபடி செய்துள்ளன. இது கடந்த ஆண்டு ரூ.13 ஆயிரத்து 119 கோடியாகக் குறைந்து இருந்தது. கடந்த ஆண்டு ஆக்சிஸ் வங்கி ரூ.11 ஆயிரத்து 688 கோடியும், ஐசிஐசிஐ வங்கி ரூ.9 ஆயிரத்து 110 கோடியும் தள்ளுபடி செய்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் தனியார் வங்கிகள் ஒட்டுமொத்தமாக ரூ.79 ஆயிரத்து 490 கோடி தள்ளுபடி செய்துள்ளன.

கடந்த 2017-18-ம் நிதி ஆண்டோடு சேர்க்கும் போது, வங்கிகளின் ஒட்டுமொத்த வாராக்கடன் ரூ.10.30 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது. இது கடந்த ஆண்டு ரூ.8 லட்சம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT