புதுடெல்லி: நட்சத்திர ஓட்டல்கள், மருத்துவமனைகள், கருத்தரிப்பு மையங்கள் உள்ளி்ட்டவற்றில் நிகழும் அதிக மதிப்பிலான பணப் பரிவர்த்தனைகளை கண்காணிக்க மத்திய நேரடி வரிகள் வாரியம் முடிவு செய்துள்ளது.
பொதுவாக ரூ.2 லட்சத்துக்கு மேல் பணமாக பரிவர்த்தனை செய்யும்போது அது குறித்த விவரங்களை நிதிப் பரிவர்த்தனை அறிக்கை மூலம் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், இந்த நடைமுறையை நிறுவனங்கள் கடைபிடிப்பதில்லை. இதனால் நிகழும்வரி ஏய்ப்பை கட்டுப்படுத்தும் நோக்கில், நட்சத்திர ஓட்டல்கள், உயர்தர பிராண்டுகளின் விற்பனையகங்கள், மருத்துவமனைகள், கருத்தரிப்பு மையங்களில் மேற்கொள்ளப்படும் அதிகமதிப்பிலான பணப் பரிவர்த்தனைகளை கண்காணிக்க மத்தியநேரடி வரிகள் வாரியம் முடிவுசெய்துள்ளது. இது தொடர்பான நடவடிக்கையை மேற்கொள்ளும்படி வருமான வரித் துறையை மத்திய நேரடி வரிகள் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது. இதன்படி, நட்சத்திர ஓட்டல்களில் நடத்தப்படும் திருமணம், ஏனைய நிகழ்ச்சிகளுக்கான பணப்பரிவர்த்தனைகள் கண்காணிக் கப்படும் என்று கூறப்படுகிறது.
அதிக மதிப்பிலான பணப்பரிவர்த்தனை நிகழும் தொழில்களை பட்டியலிட்டு, அங்கு மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனை விவரங்களை, நெருக்கடி ஏற்படுத்தாத வகையில் கேட்டுப் பெற வேண்டும் என்று வருமான வரித் துறையிடம் மத்திய நேரடி வரிகள் வாரியம் கூறியுள்ளது.
வரி நிலுவை: நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரி நிலுவை 2023 ஏப்ரலில் ரூ.24 லட்சம் கோடியாக இருந்த நிலையில் 2024 ஏப்ரலில் அது ரூ.43 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், நிறுவனங்களிடமிருந்து வரி நிலுவையை விரைந்து வசூல் செய்ய வரும் செப்டம்பர் மாதத்தில் சிறப்புக் குழு அமைக்கப்பட இருப்பதாகவும் மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.