மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தனது முதலாவது பட்ஜெட் உரையில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை மேம்படுத்துவதில் இந்த அரசு உறுதியுடன் இருக்கிறது என்று குறிப்பிட்டார். எஸ்இஇஸட் எனப்படும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மூலம் உற்பத்தி பெருக்கத்துக்கு வழிவகுப்பதோடு பொருளாதார வளர்ச்சிக்கும் வழியேற்படுத்தப்படும் என்று சுட்டிக்காட்டியிருந்தார்.
எஸ்இஇஸட் உருவாக்கத்தால் ஏற்றுமதி வளர்ச்சியடையும் என்றும் இதனால் பலருக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும் என்பதால் இவற்றின் மேம்பாட்டுக்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பட்ஜெட் உரையில் குறிப்பிடப்பட்டது.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வாரத்துக்குப் பிறகு வருமான வரித்துறையினர் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு வருமான வரிச் சலுகை அளிக்கப்படமாட்டாது என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
குறிப்பாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இத்தகைய நிறுவனங்களில் பணிபுரிபவர்களின் மொத்த எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மாறுதல் செய்யப் பட்டிருந்தாலோ அல்லது பிற கிளைகளிலிருந்து இந்த எஸ்இஇஸட் பகுதியில் செயல்படும் நிறுவனங்களுக்கு ஓராண்டு காலத்தில் மாற்றப்பட்டிருந்தாலோ அவற்றுக்கு சலுகை கிடையாது என அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளது.
இது எஸ்இஇஸட்டில் செயல்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பேரதிர்ச்சியாகவும், ஆச்சரிய மளிப்பதாகவும் அமைந்துள்ளது.
மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் (சிடிபிடி) அனுப்பி யுள்ள இந்த நோட்டீஸ், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு உதவும்வகையில் இருக்க வேண்டும் என்று நினைத் தாலும் நோட்டீஸ் அந்த இலக்கை எட்டவில்லை என்பதுதான் உண்மை.
புதிய எஸ்இஇஸட்களில் அமையும் நிறுவனங்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்க வருமான வரிச் சட்டம் வழிசெய்கிறது. ஆனால் ஏற்கெனவே செயல்படும் நிறுவனங்கள் வேறொரு புதிய பிரிவை உருவாக்கினால் அதற்கு வரி விலக்கு கிடையாது என தெரிவிக்கிறது. ஏற்கெனவே செயல்பட்டு வந்த பிரிவிலிருந்து இயந்திரங்களையோ பிறவற்றையோ புதிய எஸ்இஇஸட்டுக்கு மாற்றக் கூடாது என வருமான வரித்துறை கூறுகிறது.
ஆனால் மத்திய வர்த்தக அமைச்சகம் நவம்பர் மாதம் வெளியிட்ட அறிக்கையில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் பணிபுரிவோரை மாற்றுவதில் எவ்வித கட்டுப்பாடும் கிடையாது என தெரிவித்துள்ளது. இதனால் பல நிறுவனங்கள் எஸ்இஇஸட்டுக்கு வரிச்சலுகைக்காக மாறின. வரி தொடர்பான விஷயத்தில் மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம் (சிடிபிடி) தெளிவான வழிகாட்டுதலை அளிக்க வேண்டும் என்றே பலரும் எதிர்பார்க்கின்றனர்.
ஆனால் சிடிபிடி பிறப்பித்த வழிகாட்டுதலின்பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் எஸ்இஇஸட்டில் செயல்படும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை கிடையாது என்று கூறியுள்ளனர். இதனால் பெரும்பாலான நிறுவனங்கள் நீதிமன்றம் செல்ல உள்ளன. இப்போது தேவையற்ற சட்ட சர்ச்சை உருவாகியுள்ளது.
சிடிபிடி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் எஸ்இஇஸட்டுக்கு மாறியுள்ள சில நிறுவனங்களின் முந்தைய வரி தொடர்பான ஆவணங்களும் பரிசீலிக்கப்பட்டு, முன் தேதியிட்டு வரி வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது. வர்த்தக அமைச்சக அறிக்கையின் அடிப்படையில் எஸ்இஇஸட்டுக்குச் சென்ற நிறுவனங்கள் இப்போது இந்த பிரச்சினையையும் எதிர்நோக்கியுள்ளன.
முன் தேதியிட்டு வரி விதிப்பு செய்யப்பட மாட்டாது என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி உறுதிபட தெரிவித்தபோதிலும் சிடிபிடி அனுப்பிய சுற்றறிக்கை குழப்பமாகவே உள்ளது. மேலும் இந்த அறிக்கை பாரபட்சமாக உள்ளது. அதாவது தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை மட்டுமே பாதிக்கும் வகையில் உள்ளதாக இத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
வரி தீவிரவாதம் இருக்காது, வரி தாவா தொடராது, தொழில்துறையினரிடையே நம்பகத்தன்மை உருவாக்கப்படும் என அருண் ஜேட்லி கூறிவரும் வார்த்தைகள் வெறும் வார்த்தைகளாகத்தான் உள்ளன. அவை இன்னமும் செயல் வடிவம் பெறவில்லை.