புதுடெல்லி: பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியத்தின் (செபி) தலைவர் மாதபி புரி புச், அவரது கணவர் தவல் புச் ஆகியோர் அதானி குழுமம் தொடர்புடைய நிறுவனங்களின் நிதித் திட்டங்களில் பெரும் முதலீடு செய்திருந்தனர் என்றும் அந்த நிதிகள் மொரீசஸ் மற்றும் பெர்முடா நாடுகளுடன் சம்பந்தப்பட்டவை என்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டது.
இந்த அறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஹிண்டன்பர்க் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுக்கு மொரீசஸ் விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக மொரீசஸின் நிதிசேவை ஆணையம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஹிண்டன்பர்க் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் ‘ஐபிஇ பிளஸ் ஃபண்ட்’ மற்றும் ‘ஐபிஇ பிளஸ் ஃபண்ட் 1’ ஆகிய இரண்டும் நிதி சேவை ஆணையத்தின் உரிமம் பெற்றவை அல்ல. தவிர, அவை மொரீசஸை தலைமையிடமாகக் கொண்டவையும் அல்ல. சர்வதேச தொழில் செயல்பாடுகள் சார்ந்து மொரீசஸ் தெளிவான விதிமுறை களைக் கொண்டிருக்கிறது. அந்த விதி களுக்கு உட்பட்டே இங்கு வெளிநாட்டு நிறுவனங்கள் செயல்பட முடியும். போலிநிறுவனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. எனவே, மொரீசஸை வரி சொர்க்கம் என்று அழைக்க முடியாது” என்று குறிப் பிட்டுள்ளது.
அதானி குழுமம் பங்கு மோசடிகளில் ஈடுபட்டு வந்ததாக ஹிண்டன்பர்க் 2023 ஜனவரி மாதம் அறிக்கை ஒன்றை வெளி யிட்டது. இதையடுத்து அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு கடும் வீழ்ச்சியை சந்தித்தது.
இந்நிலையில், கடந்த வாரம் புதிய அறிக்கையை வெளியிட்ட ஹிண்டன்பர்க், அதானி குழுமம் தொடர்புடைய நிறுவனங்களின் நிதிகளில் செபியின் தலைவர் முதலீடு செய்திருந்தார் என்றும் அதன் காரணமாகவே அதானி குழுமம் மீது செபி நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியது.
ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டை அதானி குழுமமும் செபியின் தலைவர் மாதபி புரி புச்சும் மறுத்துள்ளனர்.