திருநெல்வேலி: “தமிழக முதல்வர் தலைமையில், வரும் பிப்ரவரியில் உலக ‘ஸ்டார்ட்-அப்’ நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது,” என்று குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார்.
குறு ,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் மண்டல அளவிலான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் கலந்துகொண்டு, 123 பயனாளிகளுக்கு ரூ.47.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 10 தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட தொழில் மைய மேலாளர்களுடன் அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் கடந்த 3 ஆண்டுகளில் சுய தொழில்முனைவோருக்காக ரூ.961.58 கோடி மானியத்துடன் ரூ.2,818.24 கோடி வங்கிக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 30,324 இளைஞர்கள் தொழில் முனைவோராக உருவாக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 3 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்ற 10 ஆண்டுகளில் 55,230 பேர் மட்டுமே தொழில் முனைவோராக உருவாக்கப்பட்டுள்ளனர்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்காக நாட்டிலேயே முன்னோடியாக தொடங்கப்பட்ட அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம் மூலம் ரூ.159.40 கோடி மானியத்துடன் ரூ. 302.86 கோடி வங்கி கடனுதவி வழங்கப்பட்டு 1,369 தொழில் முனைவோர் உருவாக்கப்பட்டுள்ளனர். பின்தங்கிய தென் மாவட்டங்களில் ரூ. 262.13 கோடி மானியத்துடன் ரூ. 769.27 கோடி வங்கிக் கடன் உதவிகள் வழங்கப்பட்டு, 9,594 தொழில் முனைவோர் உருவாக்கப்பட்டுள்ளனர். நாட்டிலேயே தொழில் வளர்ச்சியில் தமிழகம் 3-வது இடத்தை பிடித்துள்ளது.
‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் தொடங்கப்பட்டதில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. உலக தொழில் முதலீட்டாளர் மாநாட்டைப் போல், வரும் பிப்ரவரி மாதம் தமிழக முதல்வர் தலைமையில் உலக ‘ஸ்டார்ட்-அப்’ நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 170 ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் தொடங்கப்பட்டு ரூ.69.15 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் 90 ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் கடந்த 3 ஆண்டுகளில் தொடங்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் ராக்கெட் தொழில்நுட்பம் சம்பந்தமான தொழிற்சாலைகளை தொடங்குவதற்கு முன்வருவோருக்கு உடனடியாக தொழிற்சாலைகள் தொடங்க முன்னுரிமை கொடுக்கப்படும். தமிழக அரசின் மூலம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 8 சிட்கோ தொழிற்பேட்டைகளில் 6 தொழிற்பேட்டைகள் இதுவரை தொடங்கப்பட்டுவிட்டது. பல ஆண்டுகளாக செயல்பாட்டில் இல்லாத திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டை நூற்பாலை மற்றும் வள்ளியூரில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டை ஆகியவற்றில் புதிய தொழில் தொடங்க இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்” என்றார்.
முன்னதாக, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் மூலம் பயன்பெற்ற மேலப்பாளையம் பகுதியில் அமைந்திருக்கும் பல் மருத்துவமனை, திருநெல்வேலி மாவட்டம் சிவந்திப்பட்டியை அடுத்த முத்தூர் பகுதியில் சிட்கோ தொழிற்பேட்டை அமைய உள்ள இடம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு மையத்தின் மூலம் ரெட்டியார்பட்டி பகுதியில் கட்டப்பட்டு வரும் 7 அடுக்கு அடுக்குமாடி குடியிருப்பு, பாளையங்கோட்டை அம்பேத்கார் நகர் பகுதியில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்டவற்றை துறை சார்ந்த உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்வுகளில் எம்எல்ஏ-க்கள் அப்துல் வகாப், ரூபி மனோகரன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலர் அர்ச்சனா பட்நாயக், தொழில் வணிக ஆணையர் இல. நிர்மல்ராஜ், தமிழ்நாடு நகர்ப்புற வாழிட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் பிரபாகரன், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.