கோவில்பட்டி: தீப்பெட்டி தொழிலைப் பாதுகாக்கும் வகையில் மத்திய பட்ஜெட்டில் அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்று தீப்பெட்டி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், வெளிநாட்டு லைட்டர்களை தடை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், வேலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 2,530 தீப்பெட்டித் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றால் 6 லட்சம் தொழிலாளர்கள் பயனடைகின்றனர். இவர்களில் 90 சதவீதம் பேர் பெண்கள். தீப்பெட்டி தயாரிப்புக்கான மூலப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதுடன், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் லைட்டர்கள் போன்ற பிரச்சினைகளால் தீப்பெட்டி உற்பத்தித் தொழில் சரிவை சந்தித்து வருகிறது.
தற்போது வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே தீப்பெட்டி ஆலைகள்இயங்குகின்றன. தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தீப்பெட்டி தொழில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சிறு தொழில் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது. இதை மீண்டும் சிறுதொழில் பட்டியலில் இணைக்க வேண்டும். முத்ரா திட்டத்தில் பிணையப் பத்திரம் இல்லாமல் ரூ.5 லட்சம் கடன் வழங்கப்படுவதை, ரூ.50 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அடக்க செலவு அதிகரிப்பு: இதுகுறித்து நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கச் செயலாளர் வி.எஸ்.சேதுரத்தினம் கூறியதாவது: தீப்பெட்டித் தயாரிப்புக்குத் தேவையான அட்டை, குச்சி, மெழுகு, குளோரேட்போன்றவற்றின் விலை உயர்ந்துவிட்டது. பெட்ரோல், டீசல் மற்றும்சுங்க வரி உயர்வால், லாரி வாடகைஅதிகரித்துள்ளது. சொத்துவரி, மின் கட்டண உயர்வு உள்ளிட்டவற்றால் தீப்பெட்டியின் அடக்கச் செலவு அதிகரித்துள்ளது.
ஆனால், அடக்கச் செலவுக்கு ஏற்ப வெளிச்சந்தையில் விற்பனை விலை கிடைக்காததால், தீப்பெட்டிஉற்பத்தியாளர்கள் திண்டாடுகின்றனர். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தீப்பெட்டிக்கான ஊக்கத்தொகை 11 சதவீதமாக இருந்த நிலையில், படிப்படியாக குறைந்து தற்போது 1.5 சதவீதம் மட்டுமே மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இதை மீண்டும் 11 சதவீதமாக உயர்த்த வேண்டும்.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் லைட்டர்கள் இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படுவதால், தீப்பெட்டியின் தேவை குறைந்து, விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, வெளிநாட்டு லைட்டர்கள் இறக்குமதியை தடை செய்ய வேண்டும். வரும் 23-ம் தேதி நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதில், தீப்பெட்டித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் அறிவிப்புகள் வெளியாகும் எனநம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்