சென்னை: ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் அதன் புதிய வரவான ‘Guerilla 450’ இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. வாகன பிரியர்களை கவரும் வகையில் இதன் வடிவமைப்பு உள்ளது. இந்த வாகனம் குறித்து விரிவாக பார்ப்போம்.
ராயல் என்ஃபீல்ட் என்றதும் எல்லோருக்கும் சட்டென நினைவுக்கு வருவது அதன் புல்லட் மாடல் இருசக்கர வாகனம் தான். நூறாண்டுகள் கடந்த வாகன நிறுவனம். உலகம் முழுவதும் பிரபலமாக அறியப்படும் இந்த நிறுவனம், இந்தியாவில் புல்லட், கிளாசிக், ஹன்டர், ஷாட்கன், ஸ்க்ரேம், ஹிமாலயன், இன்டர்செப்டர், கான்டினென்டல், மீட்டியர் போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது.
இப்போது அந்த வரிசையில் Guerilla 450 இணைந்துள்ளது. 452 சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்ட் என்ஜின், அலாய் வீல், 4 இன்ச் வட்ட வடிவிலான டிஎஃப்டி ஸ்க்ரீன், மோனோஷாக் அப்ஸார்பர், ட்யூல் சேனல் ஏபிஎஸ், கூகுள் மேப்ஸ் லிங்க், மீடியா கன்ட்ரோல், யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் கொண்டுள்ளது. அனலாக், டேஷ் மற்றும் ஃப்ளேஷ் என மூன்று வேரியன்ட்களில் இந்த வாகனம் வெளிவந்துள்ளது.
ஹிமாலயன் 450 மாடலை பிரதி எடுத்தது போல இதன் வடிவமைப்பு உள்ளது. வட்ட வடிவ ஹெட்லைட் கொண்டுள்ளது. இதன் டெயில் லைட் ஹிமாலயன் 450 போல உள்ளது. மொத்தம் ஐந்து வண்ணங்களில் இந்த வாகனம் வெளிவந்துள்ளது. சிக்ஸ் ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. 11 லிட்டர் கொள்ளளவு கொண்டுள்ளது இதன் பெட்ரோல் டேங்க். இதன் ஆரம்ப விலை ரூ.2,39,000 (எக்ஸ்-ஷோரூம்). இதன் முன்பதிவு தொடங்கியுள்ளது. வரும் ஆகஸ்ட் முதல் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.