புதுடெல்லி: இந்தியாவின் மொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையில் கடந்த ஜூன் மாதத்தில் வருடாந்திர பணவீக்க விகிதம் 3.36% ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த 16 மாதங்களில் இல்லாத உயர்வாகும்.
இந்தியாவில் மொத்த விலைக் குறியீட்டு எண்ணினை ஒவ்வொரு மாதமும் 14-ம் தேதி, தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை குறிப்பிட்ட மாதத்தின் இரண்டு வார கால இடைவெளியுடன் வெளியிட்டு வருகிறது. நிறுவன ஆதாரங்கள் மற்றும் நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட உற்பத்தி அலகுகளிலிருந்து பெறப்பட்ட தரவுகளுடன் குறியீட்டு எண் தொகுக்கப்படுகிறது.
அந்த அடிப்படையில், கடந்த ஜூன் மாதத்துக்கான பணவீக்க விகிதம் குறித்த புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, இந்தியாவின் மொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையில் ஜூன் மாதத்தில் வருடாந்திர பணவீக்க விகிதம் 3.36% ஆக உள்ளது.
ஜூன் மாதத்தில் உணவுப் பொருட்கள், கச்சா பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, கனிம எண்ணெய்கள் மற்றும் பிற உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வே, பணவீக்க விகிதத்துக்குக் காரணமாக அமைந்திருக்கிறது.
மாத அடிப்படையிலான மாற்றத்தைப் பொருத்தவரை மே மாதத்துடன் ஒப்பிடும்போது ஜூன் மாதத்துக்கான மொத்த விலை குறியீட்டு எண் 0.39% ஆக உள்ளது. ஏப்ரல் மாதத்துக்கான பணவீக்க விகிதம் 1.19% ஆக இருந்தது.
பணவீக்க விகித உயர்வுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மொத்த விற்பனை பணவீக்கம் 1 வருடம் மற்றும் 4 மாத சாதனையை முறியடித்துள்ளது. காய்கறிகள் முதல் உணவுப் பொருட்கள் வரை விலை உயர்ந்து, பெரும் பணவீக்கம் பதிவாகியுள்ளது. உணவுப் பொருட்களின் பணவீக்கம் 8.68% ஆகவும், பருப்பு வகைகளின் பணவீக்கம் 21.64% ஆகவும், காய்கறிகளின் பணவீக்கம் 38.76% ஆகவும் இருந்துள்ளது. விலைவாசி உயர்வால் ஏழைகள் படும் துன்பத்தைப் பற்றி பிரதமர் நரேந்திர மோடிக்கு அக்கறை இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.