அரசுத் துறை காப்பீட்டு நிறுவனங்கள் நான்கை ஒன்றிணைக்க வேண்டும் என்று மத்திய அரசை ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ், யுனை டெட் இந்தியா இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ் ஆகிய நான்கு காப்பீட்டு நிறுவனங்களும் மத்திய அரசு நிறுவனங்களாகும். இந்த நான்கு நிறுவனங்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 1,02,000 கோடியாகும். இவற்றின் இருப்பு ரூ. 15 ஆயிரம் கோடி மற்றும் மூலதனம் ரூ. 550 கோடி.
இந்த 4 நிறுவனங்களையும் ஒன்றிணைப்பதன் மூலம் இவற்றின் சந்தை மதிப்பு அதிகரிப்பதோடு அதிக லாபம் ஈட்டும் நிறுவனமாக செயல்படும் என்று இந்த நான்கு காப்பீட்டு நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர் சம்மேளனங்கள் சுட்டிக் காட்டியுள்ளன. பாரதிய விமகாம்கர் சேனை (பிவிகேஎஸ்) தலைமையில் இந்த நான்கு நிறுவன ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகள் சமீபத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்து இந்த கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர். அத்துடன் காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 49 சதவீதமாக அனுமதிக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினர். பொதுக்காப்பீட்டில் ஈடுபட்டுள்ள இந்த நான்கு நிறுவனங்கள் மொத்தம் உள்ள காப்பீட்டில் 55 சதவீத சந்தையைப் பிடித்துள்ளன. 20 தனியார் நிறுவனங்கள் எஞ்சி யுள்ள 45 சதவீத சந்தையைப் பிடித்துள்ளன.
போட்டியை சமாளிப்பதற்காக நான்கு நிறுவனங்களும் ஒன்றுக் கொன்று பிரீமியம் தொகையைக் குறைக்கின்றன. இதனால் லாபம் குறைகிறது. இதற்குப் பதிலாக ஒன்றாக இணைப்பதன் மூலம் தனியார் நிறுவனங்களை ஒன்றிணைந்து எதிர்க்கமுடியும். லாபமும் அதிகரிக்கும் என்று சம்மேளனங்கள் சுட்டிக் காட்டி யுள்ளன.