புதுடெல்லி: ஜிஎஸ்டிஆர் 1 படிவத்தில் திருத்தம் செய்யும் வகையும் ஜிஎஸ்டிகவுன்சில் கடந்த மாதம் ஜிஎஸ்டிஆர் 1ஏ படிவத்தை அறிமுகம் செய்ய பரிந்துரைத்தது. இந்நிலையில், மத்திய நிதி அமைச்சகம் தற்போது ஜிஎஸ்டிஆர் 1ஏபடிவம் தொடர்பான அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது.
இது குறித்து மூர் சிங்கி நிறுவனத்தின் செயல் இயக்குநர் ராஜத் மோகன் கூறுகையில் “ஜிஎஸ்டி தொடர்பாக வணிகர்கள்தாக்கல் செய்யும் தகவலில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அதைதிருத்தம் செய்வதற்கான வாய்ப்பை ஜிஎஸ்டிஆர் 1ஏ வழங்குகிறது. இதில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் தானாகவே ஜிஎஸ்டிஆர் 3பி படிவத்தில் புதுப்பிக்கப்பட்டுவிடும். இதனால் வணிகர்கள் அபராதத்திலிருந்து தப்பிக்க முடியும். தவிர, ஜிஎஸ்டி தாக்கல் தொடர்பான பிழைகளும் குறையும். அந்த வகையில் இந்தப் புதிய வசதி வரவேற்கத்தக்க ஒன்றாகும்” என்று தெரிவித்தார்.
கடந்த மாதம் ஜிஎஸ்டி கவுன்சிலின் 53-வது கூட்டம் நடைபெற்றது. அதில், ஜிஎஸ்டி தாக்கலில் நிகழ்ந்த பிழைகளுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தையும் வட்டியையும் ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டது.
அந்த பரிந்துரையின்படி, 2017-18 முதல் 2019-20 வரையில் தாக்கல் செய்த ஜிஎஸ்டி ரிட்டர்னில் ஏதேனும் பிழைகள் இருந்துஅதற்கு ஜிஎஸ்டி அதிகாரி அபராதமும் வட்டியும் விதித்திருந்தால், அதை அவர் செலுத்தத் தேவையில்லை. விடுபட்டிருந்த ஜிஎஸ்டியை மட்டும் செலுத்தினால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.