பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக் 
வணிகம்

இந்தியாவில் ‘Bajaj Freedom 125’ சிஎன்ஜி பைக் அறிமுகம்!

செய்திப்பிரிவு

புனே: பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் ‘Bajaj Freedom 125’ என்ற சிஎன்ஜி பைக்கை அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கை பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டிலும் இயக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருளுக்கு ஆகும் செலவு மற்றும் வாகன புகை உமிழ்வு இதில் குறைவு என சொல்லப்பட்டுள்ளது.

ஆட்டோமொபைல் சந்தையில் சிஎன்ஜி சக்தியில் இயங்கும் கார்கள் கடந்த சில ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளன. இந்த சூழலில் சிஎன்ஜி-யில் இயங்கும் முதல் பைக்கை பஜாஜ் நிறுவனம் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. பைக்கில் இந்த நுட்பத்தை பயன்படுத்துவது இதுவே உலக அளவில் முதல் முறை என்றும் சொல்லப்படுகிறது.

ஃப்ரீடம் 125 என அறியப்படும் இந்த பைக்குக்கான புக்கிங் தற்போது தொடங்கியுள்ளது. பஜாஜ் ஆட்டோ நிறுவன வலைதளம் மற்றும் அந்நிறுவன ஷோரூம்களில் வாடிக்கையாளர்கள் பதிவு செய்யலாம். மொத்தம் மூன்று வேரியன்டில் இந்த வாகனம் வெளிவந்துள்ளது. என்ஜி04 டிஸ்க் எல்இடி - ரூ.1,10,000, என்ஜி04 டிரம் எல்இடி - ரூ.1,05,000, என்ஜி04 டிரம் - ரூ.95,000 என அறிவிக்கப்பட்டுள்ளது. இது அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை. இந்த சிஎன்ஜி பைக்கின் அறிமுகம் இந்திய இருசக்கர வாகன சந்தையில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போதைக்கு இதனை மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் முன்பதிவு செய்யலாம். மற்ற மாநிலங்களில் படிப்படியாக விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எகிப்து, தான்சானியா, கொலம்பியா, பெரு, பங்களாதேஷ் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு இதனை ஏற்றுமதி செய்யும் முடிவிலும் பஜாஜ் நிறுவனம் உள்ளது. இந்த பைக் அறிமுக நிகழ்வில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார்.

இந்த பைக்கில் இரண்டு லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. அதேபோல இதன் சிஎன்ஜி டேங்க் இரண்டு கிலோ எரிபொருளை தாங்கும் வகையில் உள்ளது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டின் Combined ரேஞ்ச் சுமார் 300 கிலோ மீட்டர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு சார்ந்து சுமார் 11 சோதனைகளை இந்த பைக் கடந்து வந்துள்ளதாகவும் பஜாஜ் தெரிவித்துள்ளது.

4 ஸ்ட்ரோக் ஏர் கூல்டு என்ஜின், மோனோ லிங்க் டைப் சஸ்பென்ஷன், டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், உடன் இந்த பைக் வெளிவந்துள்ளது. ஐந்து வண்ணங்களில் கிடைக்கிறது. பெட்ரோலில் அதிகபட்சம் 93.4 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கலாம், லிட்டருக்கு 130 கிலோ கிலோ மீட்டர் வரை மைலேஜ். சிஎன்ஜி-யில் அதிகபட்சம் 90.5 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கலாம், 200 கிலோ கிலோ மீட்டர் மைலேஜ். PESO அங்கீகார சான்று பெற்ற சிஎன்ஜி சிலிண்டர் இந்த பைக்கில் உள்ளது. இது டிரெல்லிஸ் ஃப்ரேமில் பொருத்தப்பட்டுள்ளது என பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT