மும்பை: இந்திய பங்குச் சந்தை இன்று (ஜூலை 3) காலை வர்த்தகம் தொடங்கியது முதலே ஏற்றத்தில் உள்ளது. அந்த வகையில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 80,013 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. 24,291 புள்ளிகளுடன் நிஃப்டி தொடங்கியது.
80,000 புள்ளிகளை சென்செக்ஸ் கடப்பது இதுவே முதல் முறையாகும். வங்கிகளின் பங்குகளை வாங்குவதற்கு முதலீட்டாளர்கள் செலுத்தி வரும் ஆர்வம் மற்றும் சர்வதேச அளவில் நிலவி வரும் ட்ரெண்ட் போன்றவை இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 79,869 புள்ளிகளுடன் சென்செக்ஸ் வர்த்தகம் உள்ளது. ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஏர்டெல் மற்றும் நெஸ்லே ஆகிய நிறுவனங்கள் இன்று காலை முதலே லாபம் ஈட்டி வருகின்றன. அதே நேரத்தில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், சன் பார்மா, இன்ஃபோசிஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள் பின்னடைவை எதிர்கொண்டுள்ளன.
ஆசிய பங்குச் சந்தைகளில் சியோல், டோக்கியோ மற்றும் ஹாங்காங் ஏறுமுகத்தில் உள்ளன. அமெரிக்க நாட்டு சந்தை நிலவரமும் ஏற்றத்துடன் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.
அடுத்த ஓராண்டில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 82,000 புள்ளிகளை தொடக்கூடும் என்று அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.