இமெயில், வாய்ஸ் மெயில் என்று அதிநவீன தொழிற்நுட்பத்தின் கைங்கர்யத்தில் எல்லோருடனும், எந்நேரத்திலும் ,எந்த நிலையிலும் தொடர்பு கொள்ள முடிகிறது. வெயிலில் அலைந்து நேரில் சந்திப்பதற்கு பதில் மெயிலில் தேடி எழுத்தில் சந்திப்பதில் ஒரு சௌகரியம் இருக்கவே செய்கிறது. நம்மை ஈ மொய்த்த காலம் போய் இன்று நாம் இமெயிலை மொய்க்கிறோம்! டெக்னாலஜி மெயிலோப்ய ப்ராப்தி ரஸ்து!
இதனால் வாழ்க்கையும் வியாபாரமும் எளிதாகியிருக்கிறது என்பது ஒரு புறம் இருந்தாலும் கால அழுத்தத்தில் பிஸினஸ் அவசரத்தில் மற்றவர்கள் நமக்கு ரத்தமும் சதையும் கொண்ட மனிதர்களாகத் தெரியாமல் வெறும் இமெயில் முகவரிகளாகத் தான் தெரிகிறார்கள் என்பதை கவனித்தீர்களா? மற்றவரை விடுங்கள், நாமே கூட உறவுகள் உதறப்பட்ட துறவிகள் போல் ID அகதிகளாக அலைகிறோம் என்பதை உணர்கிறீர்களா?
தொழில் ரகசியம் பகுதியில் தத்துவ பிரசங்கம் செய்கிறேனோ என்ற பயம் வேண்டாம். வியாபாரத்தை பாதிக்கும் வாழ்க்கை பாடம் பேசலாம் என்றிருக்கிறேன். தகவல் தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சியில் கம்பெனிகளில் பணியாளர்கள் சந்திப்புகள் குறைந்து, உறவுகள் சுருங்கி, மனஸ்தாபங்கள் பெருகி, தொழிற் திறன் குறைந்து, மனக் குறைகள் பெருகி வருவதைப் பற்றி கொஞ்சம் பேசுவோம்.
ஒரு துறை பணியாளருக்கு இன்னொரு துறையிலிருந்து இந்த தேதிக்குள் இந்தப் பணியை முடிக்கவேண்டும் என்று இமெயில் வருகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த மெயில் அவர்களுக்கு மட்டுமா வருகிறது. இரண்டு துறை மேனேஜர்களுக்கும், அவர்களுக்கு மேல் உள்ளவர்களுக்கும் அதுவும் பத்தாதென்று கம்பெனி சேர்மன் வரை அந்த மெயில் cc செய்யப்படுகிறது. இது போன்ற மெயிலை பெறுபவர் தான் மிரட்டப்படுவது போல் உணர மாட்டாரா? இதற்கு பதில் ‘டேய் வேலையை முடிச்சு கொடு. இங்கன இத்தன பேர் சாட்சி. ஒழுங்கா முடிக்கலன்னா மவனே முட்டிக்கு முட்டி தட்டிடுவேன்’ என்று கூறியிருக்கலாம்!
அதற்காக ‘மகராசா, இந்த வேலையை தயவு செஞ்சு முடிச்சு கொடுங்க தர்மபிரபு. உங்களுக்கு புண்ணியமா போகும்’ என்று பிச்சையெடுக்கச் சொல்லவில்லை. நாளொரு இமெயிலும் பொழுதொரு வாய்ஸ் மெயிலுமாக அனைத்தையும் மெயிலிலேயே பரிமாறும் போது அலுப்பு வந்து சலிப்பு தட்டி, தான் மிரட்டப்படுகிறோம் என்று நினைத்து உதாசீனப்படுத்தப்படுகிறோம் என்று பயந்து பணியாளர்கள் மனதில் பதற்றமும் வெறுப்பும் அதிகரிக்கின்றன என்கிறார் ‘எட்வர்ட் ஹாலோவெல்’ என்கிற அமெரிக்க மனநல மருத்துவர்.
நேரில் சந்திப்பதை பலர் போரில் சந்திப்பது போல் பாவித்து பக்கத்து சீட்டில் பணிபுரிபவரைக் கூட முகம் பார்த்து பேசாமல் மெயிலில் தொடர்பு கொள்கின்றனர். இதனாலேயே கம்பெனிகளில் பிரச்சினைகள் துவங்குகின்றன என்கிறார். வாய் கூறும் வார்த்தைகளைத் தான் இமெயிலில் எழுதினாலும் அதில் குரலில் உள்ள உணர்வும், கூறுபவர் உடம்பின் அசைவுகள் தரும் அர்த்தமும் இருப்பதில்லை. இருக்கவும் முடியாது. அதனாலேயே மெயிலை எழுதியவர் நினைக்காத தப்பான அர்த்தம் கற்பிக்கப்படும் அபாயம் அதிகரிக்கிறது.
சமயங்களில் அவசரத்தில் தவறான நபருக்கு வாய்ஸ் மெயில் அனுப்பப்படுகின்றன. தனக்கு ஒரு குறிப்பிட்ட மெயில் cc அனுப்பப்படவில்லை என்று சிலருக்கு கோபம் கூட வருகிறது. இவ்வகை மனஸ்தாபங்கள் சிறியதாய் பிறந்து எரிச்சலாய் வளர்ந்து பிரச்சினையாய் பெரியதாகி அடிதடி களேபரத்தில் சென்று முடிகிறது.
இதுவும் பத்தாதென்று ஆபீசில் ஏதோ ஒருவரிடம் ஆரம்பிக்கும் விவகாரம், விவகாரமாய் மாறி, வியாதியாய் தொற்றி கம்பெனி முழுவதும் பரவுகிறது. அமைதியாய் அடக்கமாய் இருக்கும் ஆபீஸ்கள் கூட அடக்கம் செய்யப்படும் அளவிற்கு அதல பாதாளத்தை அடைகிறது.
இன்றைய அவசர உலகிற்கு அவசியம் தேவை ‘மனித தருணங்கள்’ (Human Moments) என்கிறார் ஹாலோவெல். உண்மையான உளவியல் சந்திப்பு என்பது இரண்டு மனிதர்கள் ஒரே இடத்தில் நேர்க்கு நேர் சந்திக்கும் போது மட்டுமே நிகழக் கூடியது. வாழ்க்கையிலும் வியாபாரத்திலும் அரிதாகி வரும் மனித தருணங்களால் நிகழப் போகும் அழிவின் அறிகுறிகளை சீக்கிரமே சந்திக்கப்போகிறோம்.
தன்னை வந்து சந்திக்கும் பேஷண்டுகளில் பெரும்பாலானவர்கள் மனித தருணங்கள் இல்லாமல் வெறும் மெயில் ஐடிகளாக பார்க்கப்பட்டு அதனாலேயே அசாத்தியத்திற்கு அவதிப்படுபவர்கள் என்கிறார். தன் ஆராய்ச்சி மற்றும் அனுபவங்களை ‘ஹார்வர்ட் பிசினஸ் ரெவ்யூ’வில் ’The Human Moment At Work’ என்ற கட்டுரையாக எழுதியிருக்கிறார்.
நேரில் சந்தித்து முகம் பார்த்து உரையாடும் போது மட்டுமே நாம் நாமாக இருக்கிறோம். யோசித்துப் பாருங்கள், மற்றவருடன் மனம் விட்டு பேசும் போது நாம் அவர்கள் நம்மையும் அறியாமல் அவர்கள் முக எக்ஸ்பிரஷன்களை பார்க்கிறோம். அவர்கள் பேசும் டோனாலிடி (Tonality) கேட்கிறோம். அவர்கள் பாடி லாங்குவேஜை கவனிக்கிறோம். இதன் மொத்த கலவையை அவர்கள் பேசும் வார்த்தைகளோடு சேர்த்து அர்த்தம் காண்கிறோம். அவர்கள் உணர்வுகளை புரிந்துகொள்கிறோம். இத்தனையும் மெயில் செய்யுமா? கலர் ஸ்க்ரீனாக இருந்தாலும் ப்ரிண்ட் செய்யப்பட்ட வார்த்தைகளே ஆனாலும் அவை உயிரும், உணர்வும், உணர்ச்சிகளும் இல்லாத வெறும் ஜடங்கள் தானே!
மனித தருணங்களின் முக்கியத்துவத்தை விஞ்ஞானம் கொண்டும் விளக்குகிறார் ஹாலோவெல். நம்பிக்கை, பிணைப்பு போன்ற உணர்ச்சிகளை நமக்குள் அதிகரிக்கும் ஹார்மோன்களான ஆக்ஸிடோசின் மற்றும் வேஸோப்ரெஸ்ஸின் போன்றவற்றை நாம் இயற்கையிலேயே உடலில் பெற்றிருக்கிறோம். தாய்மை பருவத்தில் பெண்களுக்கு இது அதிகம் சுரந்தாலும் நம் அனைவரிடமும் இது உண்டு. பரிவு, பச்சாதாப உணர்வுகள் நமக்குள் அதிகரிக்கும் போது இந்த ஹார்மோன்கள் தானாகவே அதிகம் சுரக்கின்றன.
மற்றவர்களோடு சேர்ந்து அமர்ந்து பேசும் போதும் இவை நமக்குள் அதிகம் சுரக்கின்றன. மற்றவரோடு சேராமல், அவர்களைப் பாராமல் தள்ளி இருக்கும் போது இவ்வகை ஹார்மோன்கள் நமக்குள் குறைவாக சுரக்கின்றன. இதனால் நம் மனதில் பரிவு, பச்சாதாப உணர்வுகள் நம்மையறியாமலேயே குறைந்து விடுகின்றன. மற்றவரோடு நேரில் பேசுவதை விட மெயிலில் கடுமையாக பேச தோன்றுவது ஏன் என்று இப்பொழுது புரிகிறதா?
மனிதர்களை நேரில் சந்திக்கும் போது நமக்குள் இரண்டு முக்கிய நரம்பியல் கடத்திகளான (Neurotransmitters) டோபோமைன் மற்றும் செரோடோனின் அதிகம் சுரக்கின்றன என்கிறார் எட்வர்ட். டோபோமைன் நம் கவனத்தையும் சந்தோஷத்தையும் அதிகரிக்கும் சக்தி கொண்டது. செரடோனின் நம் பயத்தை கவலையை குறைக்கும் வல்லமை கொண்டது. மெயிலில் மட்டுமே சந்திக்கும் போது இவை எங்கிருந்து சுரக்கும்?
சாதாரண ஐந்து நிமிட சம்பாஷணை கூட அர்த்தமுள்ள அழகான மனித தருணம்தான். மனித தருணங்களுக்கு அவசியம் இரண்டு விஷயங்கள். நேருக்கு நேர் சந்திப்பும், உணர்ச்சியும் அறிவார்ந்த கவனமும். சக பணியாளர் உங்களிடம் பேச வரும்போது கம்ப்யூட்டரை கட்டிக்கொண்டு அழாமல் அவர் முகம் பார்த்து பேசுங்கள். அவர் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள். உங்களை சந்தித்து சென்ற பின்னும் அவரோடு நீங்கள் அனுபவித்த மனித தருணத்தின் பாசிடிவ் எஃபெக்ட் தொடர்வதை உணர்வீர்கள். சந்தித்த பிறகு பணியாளர்கள் புதிய உத்வேகத்துடன், புதுமையான சிந்தனைகளோடு அவர்கள் மெண்டல் ஏக்டிவிடி ஸ்டுமுலேட் செய்யப்படுவதை பார்ப்பீர்கள்.
நம் அவசரகதி வாழ்க்கையின் மீது விதிக்கப்படும் பாழாய்போன வரியாக மனித தருணங்களை பாவியுங்கள். மனித தருணங்கள் இல்லாத போது அங்கு கவலை தருணங்கள் தலை தூக்குகின்றன. ஒரு பெரிய கம்யூட்டர் கம்பெனியின் சிஇஓ தன் டீமில் உள்ள முக்கியமானவர்கள் அனைவரும் ஒவ்வொரு வியாழக்கிழமை மதியமும் சேர்ந்து சாப்பிட்டே ஆகவேண்டும் என்று சட்டமே வைத்திருக்கிறார். என்ன தான் தன் கம்பெனி அதிநவீன கம்பெனியாக இருந்தாலும் `High tech requires high touch’ அதாவது அதிநவீன தொழில்நுட்பத்துக்கு மனித உறவுகள் அவசியம் என்கிறார்!
இத்தனை சொல்வதால் இமெயில் மீது பூச்சிகொல்லி மருந்தடித்து கொல்லுங்கள் என்று சொல்லவில்லை. தொழிற்நுட்பம் அழகான விஷயம்தான். ஆச்சரியமான உலகை நமக்கு அளித்திருக்கிறது என்பதும் உண்மை தான். தொழிற்நுட்பத்தை ஒதுக்கித் தள்ளுங்கள் என்று சொல்லவில்லை. எதற்கெடுத்தாலும் பஸ் டிக்கெட் எடுத்து நேரில் சென்று பேசும் பழமைக்கு போய் சேருங்கள் என்று கூறவில்லை. கொஞ்சத்துக்கும் கொஞ்சம் மனித முகம் பாருங்கள். தாராளமாய் முன்னேறுங்கள். கொஞ்சம் அனைவரோடும் சேர்ந்து சென்று அதை செய்யுங்கள்.
வேகமான வாழ்க்கைக்கிடையில், விரைவான பணிகளுக்கு மத்தியில் மனித தருணங்களை மறக்கவேண்டாம். மற்ற துறை பணியாளருக்கு மெயில் அனுப்புவதை விட முடியும் போது நேரில் சென்று கைகுலுக்கி ‘தலைவா, இத சீக்கிரம் முடிச்சு கொடுத்தா தேவலை’ என்று தோள் தட்டி வேலை வாங்குவதை மெயிலில் செய்ய முடியுமா?
சாதாரணமான சந்திப்பை கூட ‘மனித தருணம்’ என்று பெயர் வைத்து அழைக்கும் அவல நிலை அடைந்திருக்கிறோம் என்பதை விடுங்கள். இவ்வளவு தூரம் வந்துவிட்டோம், இனி மனிதம் வளர்க்கிறோமோ இல்லையோ, அட்லீஸ்ட் மனித தருணம் வளர்ப்போம்.
சிந்தித்து பாருங்கள். மனித தருணம் பற்றி எழுத்துகளில் நாம் இங்கு சந்தித்ததற்கு பதில் சேர்ந்து அமர்ந்து சூடாய் ஒரு காபி குடித்துக்கொண்டே இதை பற்றி பேசியிருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்குமல்லவா? அதுதான் மனித தருணத்தின் மகத்துவம்!
satheeshkrishnamurthy@gmail.com