கோவை: தேசிய அளவில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்கள் பட்டியலில் கோவை மாவட்டம் சிறப்பாக திகழ்வதால் ‘ஐடி’, உற்பத்தித்துறை, ‘மால்’கள் என பல்வேறு துறைகளில் முதலீடு செய்ய இந்தியா மட்டுமின்றி பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.
தொழில் நகரான கோவை ஜவுளி, வார்படம், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், இன்ஜினியரிங் பொருட்கள், பம்ப்செட், கிரைண்டர் என உற்பத்தி சார்ந்த பல்வேறு துறைகளில் முன்னோடியாக விளங்குகிறது. சென்னைக்கு அடுத்து வேகமாக வளர்ந்து வரும் நகரமாகவும், தேசிய அளவில் சிறப்பான வளர்ச்சி பெற்றுவரும் இரண்டாம் நிலை நகரங்களில் ஒன்றாகவும் கோவை திகழ்கிறது. மாவட்டம் முழுவதும் உள் கட்டமைப்பு, ரியல் எஸ்டேட் தொழில் சூடுபிடித்துள்ளது.
நகர் மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் நிலத்தின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. விளாங்குறிச்சி சாலையில் டைடல் பார்க், சரவணம்பட்டி (சத்தி சாலை), பொள்ளாச்சி சாலை என அனைத்து பகுதிகளிலும் முன்னணி ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் பல முன்னணி ஐடி நிறுவனங்கள் புதிய அலுவலகத்தை கோவையில் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளன.
ஏற்கெனவே ‘லுலு’ நிறுவனம் ஹைபர் மார்க்கெட்டை கோவையில் தொடங்கியுள்ள நிலையில் உணவு பதப்படுத்துதல் நிறுவனத்துக்கும் கோவையில் முதலீடு செய்துள்ளது. இதே போல் ‘பீனிக்ஸ்’ மாலும் விரைவில் கோவையில் முதலீடு செய்யதிட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தவிர டிபென்ஸ் பூங்கா அமைத்தல் என்பன உள்ளிட்ட உற்பத்தித்துறை சார்ந்த பல்வேறு துறைகளிலும் முதலீடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இவற்றுக்கு ஏற்ப கோவையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என தொழில்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின் (கொடிசியா) தலைவர் கார்த்திகேயன், இந்திய தொழில்வர்த்தக சபை கோவை முன்னாள் தலைவர் நந்தகுமார் ஆகியோர் கூறும்போது, ‘‘காலநிலை, போக்குவரத்து நெரிசல் குறைவு என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களை தவிர்த்து கோவை போன்ற இரண்டாம் நிலை நகரங்களில் முதலீடுகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது.
இருப்பினும் மெட்ரோ ரயில் சேவை, சர்வதேச விமான போக்குவரத்து வசதி அதிகரிப்பு, சர்குலர் (நகருக்குள் மட்டும் இயக்கப்படும்) ரயில் வசதி, மேற்கு புறவழிச்சாலை திட்டத்தை விரைந்து முடித்தல், எல் அண்ட் டி புறவழிச் சாலையை அகலப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் எதிர்வரும் காலங்களில் அதிகரிக்கும் மக்கள் தொகைக்குஏற்ப அனைத்து வசதிகளையும் செய்து தர முடியும்,’’ என்றனர்.
கோவை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கூறும்போது, ‘‘தொழில் வளர்ச்சிக்கு ஒற்றைசாளர முறையில் அனுமதி உள்ளிட்டஅரசு சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும். கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைத்தல்,டைடல் பார்க் வளாகத்தில் வேலைவாய்ப்பைஅதிகரிக்க கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சாலை, ரயில், விமான போக்குவரத்து வசதிகள் அதிகரிக்கவும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்,’’ என்றார்.