நூ
லாசிரியர் சைமன் ஹார்லே என்பவர் விளையாட்டு உளவியல் ஆலோசகராகவும் பயிற்சியாளராகவும் பத்தாண்டுகளுக்கு மேல் பணியாற்றி அதன் பயனாக ஒலிம்பிக் மற்றும் பன்னாட்டு விளையாட்டு வீரர்களை வெவ்வேறு வகையான விளையாட்டிற்கு தயார் படுத்தினார். அந்த செயல்பாடுகளின் அனுபவத்தை புத்தகமாக எழுதியிருக்கிறார். தற்பெருமை, பயம், சமுதாயத்தின் மீது குறை காணுதல், பொறாமை இது போன்ற சில காரணிகள் குழுவின் முழுமையான செயல்பாடுகளைத் தவிர்க்கும். கீழே கிடக்கும் நெல்லிக்காய்களை பொறுக்கி சாக்கில் போட்டால் அவை ஒன்றோடு ஒன்று இணைந்து, ஒன்றாக காட்சியளிக்காது. மூட்டையில் இருந்து சிதறும் காய்கள் வெகு வேகத்தில் மறைந்து போகும். மேலே சொன்ன தற்பெருமை மற்றும் பயம் போன்றவைகள் ஒரு குழு ஒன்றாக இருந்தாலும் கிடைக்கும் முதல் வாய்ப்பில் நெல்லிக்காய் மூட்டையாக மாறும் சாத்திய கூறுகள் ஏராளம்.
திறமை வாய்ந்த குழுக்களை எவ்வாறு உருவாக்குவது என்ற இந்த புத்தகம் வேத பாடம் அல்ல, ஆனால் அனுபவ கொள்முதல். அமெரிக்காவில் ஆகாய விமானத்தை செலுத்தும் விமானிகளை ஆய்வு செய்த போது 78 சதவீதம் பாதுகாப்புக் குறைபாடுகள் ஏற்படுவதற்கு இரண்டிற்கும் மேற்பட்ட விமானிகள் முதன் முறையாக இணைந்து பணியாற்றுவதே காரணம் என்று கண்டறியப்பட்டது. விண்வெளி ஆய்வு நிறுவனம் NASA வேறுவகையான முடிவை வெளிகொண்டு வந்தது. மிகவும் களைப்படைந்த விமானிகள் முதலிலேயே ஒன்றாக பணியாற்றியிருந்தால் விபத்துகள் ஏற்படுவது பாதிக்கும் குறைவாக பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், விமானிகள் நல்ல ஓய்வுடன் விமானத்தை செலுத்தும் பொழுது அவர்கள் முன்னதாக ஒருவரோடு ஒருவர் இணைந்து பணியாற்றாத சூழலில் விபத்துகள் அதிக அளவில் ஏற்படுவதாக பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆக தவறுகளுக்கும், குறைபாடுகளுக்கும் ஒரு மிகப்பெரிய முதுகு எலும்பாக சரியானவைகளை நிமிர்ந்து நிற்க செய்யும் காரணிகளாக மிகவும் முனைப்போடு வெளிப்படுத்துவது குழு பங்களிப்பு மற்றும் ஏற்கெனவே ஒன்றாக பணியாற்றிய முன் அனுபம்தான் என்றால் மிகையாகாது.
ஆறு முக்கியமான குணாதிசயங்களை நூல் ஆசிரியர் எடுத்து கூறுகிறார். இவை ஒவ்வொன்றைப் பற்றியும் மிக விளக்கமாக தொடர்புடைய மேற்கோள்களோடு விவரித்து கூறுகிறார்.
1. இலக்கை அடைவதில் துல்லியம்.
2. பங்களிக்கப்பட்ட தரமும் எதிர்ப்பார்ப்பு களும்.
3. கற்றலே தலையாயது,
4. மூர்க்கத்தனமான நேர்மை.
5. ஒற்றுமையில் வேற்றுமை
6. பிறரைப்பற்றிய நல்ல எண்ணம்.
குறிபார்த்து சுடும் போது குறி தப்பினால் புலி உயிர் பிழைக்கும், ஆனால் நாம் உயிர் பிழைப்போமா என்பது புலியின் இரக்க குணத்தைப் பொறுத்தது. அதே சமயம் மிகச் சரியாக குறிவைத்து சுட்டிருந்தால் புலியின் கருணைக்கு கெஞ்சி காத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அது போன்றே இலக்குகளை முடிவு செய்யும் பொழுது முடியக் கூடிய இலக்குகளை அறிவுபூர்வமான உத்திகளால் முயன்று முடிக்கும் பொழுது சாதனை வசப்படும் இல்லையேல் வேதனை கூடவரும். எனவே, இலக்கை குறிவைக்கும் பொழுதும் அடைய முயற்சிக்கும் பொழுதும் துல்லியம் மிகவும் அவசியம்.
தரத்தை நிர்ணயிக்கும் பொழுது குழுவின் செயல் திறைனை குறித்து பகிர்ந்து கொள்ளுதல் அவசியம். செயல்திறன் குறைவாகவும், தரநிர்ணயம் அதிக அளவிலும் இருக்கும் பொழுது தலைகீழ் விகிதமாக விடையிருக்கும் என்பது உண்மையானதே. தர நிர்ணயம் அதிக அளவில் இருக்கும் பொழுது செயல் திறனை ஊக்குவித்து செயல்பாடுகளில் புத்துணர்ச்சி ஏற்படும் பொழுது முடிவுகளும், இலக்குகளும் எளிதாகப்படும். கடினமான இலக்குகளையும் அதிகபட்ச எதிர்ப்பார்ப்புகளோடு எதிர் கொள்ளும் பொழுது உணர்வுகளும் மெய்பாடுகளும் ஒன்றை ஒன்று ஈர்க்கும் செயல் தவிர்க்க முடியாததாக ஆகிவிடுகிறது.
கற்றலுக்கு வயதோ, பருவமோ, காலநிலையோ ஒரு கருவியாகாது. வாழ்க்கை முழுவதும் கற்றல் என்பதை நிறுவனங்களில் கற்கும் முறைகளோடு இணைத்துப் பார்க்கிறார்கள். தொடர்புடைய பணிகளை ஒன்றுக்கொன்று இணைத்து கற்றலைக்கூட்டி வெற்றியை எளிதாக வசப்படுத்துவது இன்றியமையாதது. வெகுவாரியான நிறுவனங்கள் பணியில் சேர்ந்த உடனோ அல்லது விளையாட்டுக் குழுக்களில் இடம் கிடைத்தவுடனேயோ கற்றலை தொலைத்து விடுகிறார்கள். தொலைந்து போன கற்றல் தோல்வியை மட்டுமே தரும். எனவே, சிறந்த குழுக்களாக மாறுவதற்கு ஒவ்வொருவரின் கற்றலும், முறைகளும், கற்றலின் பயன்பாடுகளும் மிகவும் அவசியமானது ஆகும். இதை உணர்ந்த குழு உறுப்பினர்கள் வெற்றிக்கு வாடிக்கையாளர்கள் ஆகிறார்கள்.
நேர்மை என்பது மெல்லிய மலராக காற்றில் வளைந்து விடும் அளவில் இருக்க கூடாது. மாறாக, முறையான மூர்க்கத்தனமான, மாற்ற முடியாத, நேர்மை குணம் குழுக்களின் வெற்றிக்கு தலையாயது. குழு உறுப்பினர்கள் நேர்மை பற்றிய நல்லெண்ணம் வைத்திருந்தால் போதாது. நேர்மை பற்றிய புரிதலும், ஆழமான அசைக்க முடியாத மூர்க்கதனமான நம்பிக்கையும் உள்ள குழுக்கள் வெற்றியை வசமாக்கும். முன்னர் கூறிய நெல்லிக்காய் தொடர்பான உவமை நேர்மையற்ற குழுக்களின் அல்லது நேர்மையின் மீது நம்பிக்கை இல்லாத குழுக்களின் மீது உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். நேர்மையற்ற குழு உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் இணைந்து பணியாற்ற முடியாது. ஒருவரின் நம்பிக்கை மற்றவரின் நம்பிக்கையை கணித எண்ணிக்கையில் அல்லாமல் உணர்வு பூர்வமான எண்ணிக்கையில் மேலதிகமாக உணரப்படுகிறது. அதுபோன்ற கண்ணுக்கு தெரியாத உணர்வு பூர்வமான நம்பிக்கையை ஏற்படுத்த நேர்மையை விதைத்துக் கொண்டே இருந்தால் விளைச்சல் பல்கிப்பெருகும்.
மாற்றுக்கருத்தைப் போலவும், எதிரான வாதங்களை எடுத்துக்கூறுவதைப் போலவும் தலைப்பு இருப்பதாக பார்த்தவுடனே சிலருக்கு தோன்றும். ஆனால், உண்மை அதுவல்ல. ஒன்று போன்ற எண்ணம் பலவீனங்களையும் எதிர் மற்றும் எதிரிகளின் உத்திகளையும் அடையாளம் காண முடியாமல் செய்துவிடும்.
காவலுக்கு நிற்கும் நாயைப்போல குழுவில் யாரேனும் ஒருவர் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டு நேர் எதிர் திசையில் தங்களுடைய கருத்துகளில் பயணிக்கவேண்டும். அதுபோன்ற நேரங்களில் எச்சரிக்கையும் விழிப்புணர்வும் இருட்டில் பள்ளத்தில் விழுந்து விடாமல் எச்சரிக்கையை எடுத்துக்கூறி வெற்றியின் வழியில் குழுக்களை வழிநடத்தும்.
எதிர்மறை எண்ணங்களும் எதிர்மறை சொற்களும் நம்மைப் பற்றியும், பிறரைப்பற்றியும் நல்ல எண்ணங்களை வடிவமைக்க உதவி செய்யாது. அது போன்ற நேரங்களில் குழு உறுப்பினர்களின் ஒன்று சேர்க்கும் கட்டமைப்பு மற்றவர்களை பற்றிய நல்ல எண்ணம் இல்லாவிடில் அவ்வாறு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு. நேர்மறை எண்ணங்களும், நேர்மறை கருத்து பரிமாற்றமும் நம்மைப்பற்றியும் பிறரைப்பற்றியும் நல்ல எண்ணங்களை ஏற்படுத்த உதவி செய்யும். உதாரணமாக ஒரு மருத்துவமனையில் பணியாற்றும் நபர் எந்த பிரிவில் பணியாற்றுகிறீர்கள் என்ற பொழுது மருத்துவமனையின் இதயத்தில் பணியாற்றுகிறேன் என்று கூறினார்.
அவர் பணிபுரிந்தது பஞ்சை சுத்தம் செய்யும் பிரிவில் இருப்பதை எவ்வளவு அழகாக கூறியிருக்கிறார் என்பது வியப்புக்குரியது. மிருகத்தனமான நேர்மை என்பது குழுவில் இருக்கும் ஒவ்வொருவரும் மற்றவர்களை குறைகூறாமல் தங்கள் குறைகளை சரிவர ஆய்வு செய்து ஏற்றுக் கொள்ளக்கூடிய பக்குவம் ஆகும். இதுப்போன்ற குழுக்களை இணைக்கும் உத்திகள் புத்தகம் முழுவதும் தூவப்பட்டு இருக்கின்றன. பயிற்சியாளர்களும், விளையாட்டு குழுக்களின் தலைவர்களும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.
rvenkatapathy@rediffmail.com