சென்னை: தனியார் பால் விலை இன்று முதல் குறைக்கப்படுகிறது. பால், தயிர் விற்பனையில் சரிவு, தொழில் போட்டி காரணமாக முன்னணி பால் நிறுவனங்கள் தங்களது பால் விலையை மீண்டும் குறைத்துள்ளன.
ஆவினுக்கும் தனியார் பால் நிறுவனங்களுக்கும் இடையிலான பால் விலையில் அதிக வித்தியாசம் மற்றும் தனியார் பால் நிறுவனங்களுக்கு இடையே தொழில் போட்டி காரணமாக தனியார் பால் விற்பனை சரியத் தொடங்கியது. அதனால் தான் தனியார் நிறுவனங்கள் ஏற்கெனவே பால் விலையை குறைத்தன. இருப்பினும் நிலைமை சீரடையாததால் விலையை மீண்டும் குறைக்க முடிவு செய்தன.
இதன்படி இன்று முதல் பால் விலை குறை கிறது. இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி தெரிவித்திருப்பதாவது:
தனியார் பால் நிறுவனங்கள் தங்களது விற்பனையை தக்க வைத்துக் கொள்வதற்காக கடந்த 18-ம் தேதி பால் விலையைக் குறைத்தன. குறிப்பாக ஆரோக்யா நிறுவனம் தங்கள் பால் விலையை லிட்டருக்கு ரூ.2-ம், தயிர் விலை கிலோவுக்கு ரூ.4-ம் குறைத்தது.
மீண்டும் குறைப்பு: இந்த நிலையில், ஆரோக்யா நிறுவனம் இன்று முதல் (ஜூன் 25) பால், தயிர் விலையை மீண்டும் குறைத்துள்ளது. அதன்படி நிறை கொழுப்பு (Full Gream Milk) பால் லிட்டர் ரூ.66-ல் இருந்து ரூ.65 ஆகவும், ஒரு கிலோ தயிர் ரூ.76-ல் இருந்து ரூ.74 ஆகவும் குறைத்துள்ளது. இதனால் ஆரோக்கியா உள்ளிட்ட முன்னணி தனியார் பால் நிறுவன தயாரிப்புகளின் விலை கணிசமாகக் குறைந்திருக்கின்றன.
அதேநேரத்தில், பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பாலுக்கான விலையையும் லிட்டருக்கு ரூ.12-க்கு மேல் குறைத்திருக்கிறார்கள் என்று பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.