சென்னை: மீன்பிடித் தடைக்காலம் முடிந்து ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு அதிகளவு மீன்கள் கிடைத்ததால், காசிமேட்டில் மீன் வியாபாரம் களைகட்டியது.
தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் கடந்த 14-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, அன்று நள்ளிரவே மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். சென்னை காசிமேட்டில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கடலுக்கு புறப்பட்டுச் சென்றன.
ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற படகுகள் கடந்த 2 தினங்களாக கரை திரும்ப தொடங்கி உள்ளன. வஞ்சிரம், வவ்வால் உள்ளிட்ட பெரிய வகை மீன்கள் அதிகளவில் கிடைத்தன.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று காசிமேட்டில் காலை முதலே மீன் வாங்க கூட்டம் குவிந்ததால் வியாபாரம் களைகட்டியது. மீன்களின் விலையும் சற்று குறைந்ததால் பொதுமக்கள் மீன்களை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
வஞ்சிரம் ரூ.1,200-க்கும், இறால் ரூ.300-க்கும், சுறா ரூ.500-க்கும், ஷீலா மீன் ரூ.250-க்கும், சங்கரா ரூ.350-க்கும், வவ்வால் ரூ.1,100-க்கும், கிழங்கா ரூ.300-க்கும், பர்லா ரூ.200-க்கும், நண்டு ரூ.300-க்கும், கடமா ரூ.300-க்கும் விற்பனையானது. இதுகுறித்து, மீனவர்கள் கூறுகையில், ‘ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்ற விசைப் படகுகள் 10 நாட்களுக்குப் பிறகு மீண்டும் கரை திரும்ப தொடங்கி உள்ளன.
இதனால், மீன்களின் வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக, பெரிய மீன்கள் வரத்து அதிகளவில் உள்ளது. இதனால், வியாபாரம் நன்றாக இருந்தது.
கடலுக்கு சென்றுள்ள படகுகள் அனைத்தும் கரை திரும்பினால் அடுத்த வாரம் முதல் பெரிய மீன்களின் விலை மேலும் குறையத் தொடங்கும்’ என்றனர்.