மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் நேற்று 77 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை படைத்தது. வர்த்தக இறுதியில் சென்செக்ஸ் 308.37 புள்ளிகள் (0.40%) உயர்ந்து புதிய உச்சமாக 77,301.14 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் 374 புள்ளிகள் உயர்ந்து இதுவரை இல்லாத வகையில் 77,366.77 வரை சென்றது.
அதேபோன்று, தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டியும் 92.30 புள்ளிகள் (0.39%) உயர்ந்து முதன்முறையாக 23,557.90 புள்ளிகளை எட்டியது. வர்த்தகத்தின் இடையே நிஃப்டி 113.45 புள்ளிகள் அதிகரித்து 23,579.05 வரை சென்று புதிய உச்சத்தை பதிவு செய்தது.
நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் என்ற ஃபிட்ச் நிறுவனத்தின் மதிப்பீடு, நுகர்வோர் செலவினத்தில் மீட்சி, முதலீட்டு நடவடிக்கைகளில் விறுவிறுப்பு ஆகி யவை பங்குச் சந்தையின் ஏற்றத்துக்கு முக்கிய பங்காற்றின.