புதுடெல்லி: ஒன்றுக்கு மேற்பட்ட சிம் கார்டுகளைப் பயன்படுத்துவதற்கு கட்டணம் விதிக்க இருப்பதாக வெளியான தகவல்கள் பொய்யானவை என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.
சமீபத்தில், தொலைத் தொடர்பு எண்கள் ஒதுக்கீடு தொடர்பாக ஆய்வறிக்கையை ஒன்றை டிராய் வெளியிட்டது. தொலைத் தொடர்புஎண்கள் ஒதுக்கீடு தொடர்பாக கொண்டுவரப்பட வேண்டிய மேம்பாடுகள் குறித்து அந்தக் அறிக்கையில் முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஒன்றுக்கு மேற்பட்ட சிம் கார்டுகளை பயன்படுத்துவதற்கு இனி கட்டணமுறையை கொண்டு வர இருப்பதாக செய்திகள் வெளியான. இதற்கு, வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.
தவறான செய்திகள்: இந்நிலையில், ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறானவை என்றும், கட்டணம் விதிப்பது தொடர்பாக எந்த திட்டமும் இல்லை என்றும் டிராய் தெரிவித்துள்ளது.
இது குறித்து டிராய் கூறுகையில், “தொலைத் தொடர்பு எண்கள் ஒதுக்கீடு தொடர்பான நடைமுறையை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளையே நாங்கள் எங்கள் அறிக்கையில் முன்வைத்துள்ளோம். இதை சில ஊடகங்கள் தவறாக புரிந்துகொண்டு நாங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட சிம் கார்டு பயன்படுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கப் போவதாக செய்திகள் வெளியிட்டன. இது தவறான செய்தியாகும். அப்படியான எந்தத் திட்டமும் எங்களிடம் இல்லை” என்று விளக்கம் அளித்துள்ளது.