வணிகம்

சந்தை மதிப்பில் மைக்ரோசாஃப்டை முந்திய ‘ஆப்பிள்’ - எல்லாம் ஏஐ மாயம்!

செய்திப்பிரிவு

கலிபோர்னியா: சந்தை மதிப்பில் உலகின் முதல் நிறுவனமாக மைக்ரோசாஃப்டை முந்தியுள்ளது ஆப்பிள் நிறுவனம். இதற்கு காரணம், அந்த நிறுவனம் அண்மையில் ‘ஓபன் ஏஐ’ நிறுவனத்துடன் கைகோத்தது தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகின் மதிப்பு மிக்க நிறுவனமாக ஆப்பிள் உருவெடுத்துள்ளது.

நேற்று (புதன்கிழமை) மட்டுமே அந்நிறுவன பங்குகள் சுமார் 4 சதவீதம் அதிகரித்து 215.04 டாலர்களை எட்டியுள்ளது. இதன் மூலம் அதன் சந்தை மதிப்பு 3.29 ட்ரில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3.24 ட்ரில்லியன் டாலர்களாக உள்ளது.

முன்னதாக, திங்கட்கிழமை அன்று ஆப்பிள் உலக டெவலப்பர்கள் மாநாட்டில் ஏஐ குறித்து ஆப்பிள் அறிவித்தது. அதன் பிறகு அமெரிக்க நாட்டின் பங்குச் சந்தையில் ஆப்பிளின் பங்கு மதிப்பு செவ்வாய்க்கிழமை சுமார் 7 சதவீதம் என அதிகரித்தது. ஏஐ சார்ந்த அம்சங்கள் மற்றும் மென்பொருள் மேம்பாடு சந்தையில் ஐபோன்களின் விற்பனையை அதிகரிக்க செய்யும் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

குறிப்பாக, ஏஐ உதவியுடன் ஆப்பிளின் ‘Siri’ வாய்ஸ் அசிஸ்டன்ட் மெசேஜ், மின்னஞ்சல், காலண்டர் மற்றும் தேர்ட் பார்ட்டி செயலிகளுடன் எப்படி இன்ட்ராக்ட் செய்யும் என்பதை ஆப்பிள் சிஇஓ டிம் குக் விவரித்தார்.

ஏஐ தொழில்நுட்பத்தில் ஆப்பிள் பின்தங்கி இருப்பதாக பலரும் சொல்லி இருந்தனர். ஆனால், இந்த டெவலப்பர் மாநாடு அது அனைத்தையும் மாற்றி உள்ளது. வரும் நாட்களில் வெளிவர உள்ள ஆப்பிள் போன்களின் ஏஐ திறன் சார்ந்த செயல்பாடு மேம்பட்ட வகையில் இருக்கும் நம்பப்படுகிறது. இது சந்தையில் நிலவும் டிமாண்டுக்கு ஏற்ற வகையில் உள்ளது என்றும் வெட்புஷ் செக்யூரிட்டிஸ் பங்கு வர்த்தக நிர்வாக இயக்குனர் மைக்கேல் ஜேம்ஸ் தெரிவித்துள்ளார்.

ஏஐ நுட்பத்தினால் ஆப்பிள், கூகுள், மைக்ரோசாஃப்ட், என்விடியா போன்ற டெக் நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த வாரம் சந்தை மதிப்பில் ஆப்பிள் நிறுவனத்தை என்விடியா முந்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT