வணிகம்

வெப்ப அலை குறைந்ததால் ஆவின் தினசரி கொள்முதல் 33 லட்சம் லிட்டராக அதிகரிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் கோடை வெப்பத்தால் குறைந்திருந்த ஆவின் பால் கொள்முதல் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக 33.04 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கடும் வெப்பம் கொளுத்தியது. இதனால் கால்நடைகளுக்கு வெப்ப அழுத்தம் ஏற்பட்டதில், உள்நாட்டு, வெளிநாட்டு கலப்பின கறவை மாடுகளின் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதன் விளைவாக, தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தின் சராசரி கொள்முதல் பால் அளவும் குறைந்தது.

பிப்ரவரியில் தினசரி பால் கொள்முதல் சராசரியாக 29 லட்சம் லிட்டர் இருந்த நிலையில், ஏப்ரலில் 26 லட்சம் லிட்டராக சரிந்தது. இந்நிலையில், தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதல் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இதுகுறித்து ஆவின் அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் ஆவின் பால் தினசரி கொள்முதல் 28 லட்சம் லிட்டரில் இருந்து 32 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ததால், பசும்தீவனம் அதிகரித்துள்ளது. பசு, எருமை மாடுகள் கன்றுகளை ஈன்றுள்ளன. இந்த நிலை செப்டம்பர் வரை தொடரும்.

இதன் காரணமாக, பால் உற்பத்தி அதிகரித்து, ஆவின் பால் கொள்முதல் உயர்ந்துள்ளது. மே 24-ம் தேதி ஆவின் கொள்முதல் 28.69 லட்சம் லிட்டராக இருந்தது. இது ஜூன் முதல் வாரத்தில் 32.47 லட்சம் லிட்டராக அதிகரித்தது. குறிப்பாக, கடந்த 11-ம் தேதி பால் கொள்முதல் அளவு அதிகபட்சமாக 33.04 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது. ஆவின் பால் கொள்முதலை தொடர்ந்து அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஆவின் அதிகாரிகள் கூறினர்.

SCROLL FOR NEXT