வணிகம்

பி.ஏ.சி.எல். நிறுவனத்துக்கு செபி கெடு: முதலீட்டாளரிடம் திரட்டிய ரூ.49,100 கோடியை திருப்பிக் கொடுக்கவேண்டும்

செய்திப்பிரிவு

சட்டத்துக்கு விரோதமாக திரட்டிய சுமார் ரூ.50,000 கோடியை பி.ஏ.சி.எல். நிறுவனம் உடனடியாக முதலீட்டாளர்களுக்கு திருப்பித்தரவேண்டும் என்று செபி உத்தரவிட்டுள்ளது. மேலும் தொடர்ந்து முதலீட்டை திரட்டு வதற்கு தடையும் விதித்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் திரட்டிய தொகையை மூன்று மாதத் துக்குள் முதலீட்டாளர்களுக்கு திருப்பித்தரவும் அது உத்தர விட்டுள்ளது.

மேலும் நிறுவனத்தின் புரமோட் டர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து 92 பக்க அறிக்கையை செபி வெளியிட்டிருக்கிறது..

இதுவரை 49,100 கோடி ரூபாயை இந்த நிறுவனம் சட்ட விரோதமாக திரட்டி இருப்பதாக தெரிகிறது.

ஏப்ரல் 1,2012 முதல் பிப்ரவரி 25, 2013-ம் வரையிலான தகவல்கள் கிடைக்கவில்லை என்பதால் இந்த நிறுவனம் திரட்டிய தொகை 50,000 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்று தெரிகிறது.

சகாரா நிறுவனம் திரட்டிய தொகையை விட இரு மடங்குக்கு பிஏசிஎல் நிறுவனம் திரட்டி இருக்கிறது. (சகாரா நிறுவனம் திரட்டிய தொகை 24,000 கோடி ரூபாய்)

தோராயமாக 5.85 கோடி வாடிக்கையாளர்களிடம் இந்த தொகையை திரட்டி இருப்பதாக தெரிகிறது.

இவர்களுக்கு நிலம் வழங்கப்படுவதாக சொல்லி இந்த தொகை திரட்டப்பட்டிருக்கிறது. ஆனால் இன்னும் நிலம் வழங்கப்படவில்லை.

இந்த நிறுவனத்தின் மூத்த தலைவர்கள் சிபிஐ மற்றும் செபி அதிகாரிகளால் விசாரணை செய்யப்பட்டு வருகிறார்கள். 16 ஆண்டுக்கு முன்பு இருந்தே செபிக்கும் பிஏசிஎல் நிறுவனத் துக்கும் இடையே வழக்கு நடந்து வருகிறது.

கடந்த 2002-ம் ஆண்டு பிஏசிஎல் நிறுவனம் பணம் திரட்டுவது கூட்டு முதலீட்டு திட்டம் என்றும் அது செபியின் கட்டுபாட்டில் வரும் என்றும் செபி உத்தரவிட்டது.

ஆனால் ராஜஸ்தான் நீதிமன்றம் இது கூட்டு முதலீட்டு திட்டம் இல்லை என்று தீர்ப்பளித்து விட்டது. அதன் பிறகு இந்த நிறுவனம் புதிய திட்டத்தையும் வெளியிடவில்லை. ஒரே திட்டத்திலே இத்தனை ஆண்டு காலமாக பணத்தை திரட்டி வருகிறது.

மேல் முறையீடு

செபியின் இந்த உத்தரவை அடுத்து பங்குச் சந்தை மேல்முறையீட்டு தீர்ப் பாயத்தை(எஸ்.ஏ.டி) அணுகப் போவதாக அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. மேலும் நிறுவனத்திடம் போதுமான அளவுக்கு சொத்துக்கள் இருக்கிறது என்றும் செய்திக்குறிப்பு வெளியிட்டிருக்கிறது.

மேலும் முதலீட்டாளர்களிடம் திரட்டிய பணம் பாதுகாப்பாக இருக்கிறது, அவற்றுக்கு எந்த ஆபத்தும் கிடையாது என்றும் இந்த நிறுவனம் தெரிவித் திருக்கிறது.

SCROLL FOR NEXT