வணிகம்

ஏற்றுமதியாளர்களுக்கு ‘பாரத் மார்ட்’ திட்டம் குறித்து கருத்தரங்கம் @ சென்னை 

துரை விஜயராஜ்

சென்னை: இந்திய தயாரிப்புகளை வெளிநாடுகளிலும் கிடைக்க பெற செய்யும் ‘பாரத் மார்ட்’ திட்டம் குறித்து ஏற்றுமதியாளர்களுடனான கருத்தரங்கம் சென்னையில் இன்று (ஜூன் 6) நடந்தது.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் இந்தியாவுக்கு வெளியிலும் விற்பனை செய்யப்படும் வகையில், ‘பாரத் மார்ட்’ திட்டத்தை இந்திய அரசு துபாயில் தொடங்கி உள்ளது. ‘பாரத் மார்ட்’ துபாய் ஜெபல் அலியில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய நிறுவனங்களுக்கான ‘ஷோரூம்’ மற்றும் கிடங்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியை இந்திய நிறுவனங்கள் பெற்றிடும் வகையில் இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (ஃபியோ), டிபி வேர்ல்டு நிறுவனத்துடன் இணைந்து இந்தியா முழுவதும் உள்ள இந்திய உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்களிடையே ‘பாரத் மார்ட்’ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

அதன்படி, இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், டிபி வேர்ல்ட் மற்றும் ஜெபல் அலி சுதந்திர வர்த்தக மண்டலம் (ஜாஃபா) உடன் இணைந்து தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ‘பாரத் மார்ட்’ பயன்கள், வசதிகள், வர்த்தகம் அணுகுமுறைகள் குறித்து தெளிவுப்படுத்தும் வகையில் சென்னையில் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சியை இன்று நடந்தியது.

இதில் இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் மண்டல தலைவர் ஹபீப் ஹூசைன், இணை இயக்குநர் (பொது) உன்னிகிருஷ்ணன், ஜெபல் அலி சுதந்திர வர்த்தக மண்டலத்தின் மூத்த மேலாளர் கைத் அல்பன்னா, டிபி வேர்ல்டு நிறுவனத்தின் வணிக வளர்ச்சி இயக்குநர் அம்னீஷ் மிஷ்ரா மற்றும் தமிழகத்தை சேர்ந்த உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் மண்டல தலைவர் ஹபீப் ஹூசைன், இணை இயக்குநர் (பொது) உன்னிகிருஷ்ணன் ஆகியோர் பேசுகையில், “பாரத் மார்ட் திட்டத்தின் முக்கிய நோக்கம், இந்தியாவின் சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஷோரூம் மற்றும் கிடங்கு வசதியை பெறுவதற்கான வாய்ப்பை வழங்குவது தான். அதுமட்டுமின்றி, ஐரோப்பா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் பரந்த சந்தை திறனை மேம்படுத்தவும் தான்.

இந்தத் திட்டம், இந்திய உற்பத்தி பொருட்கள் உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு ஒரே பகுதியில் இருந்து சென்றடைய உதவும். இந்த முயற்சி இந்தியாவின் தயாரிப்புகளின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்த உதவுகிறது. கைவினைப் பொருட்கள் முதல், நவீன தொழில்நுட்ப கண்டுப்பிடிப்புகள் வரை இந்திய உற்பத்தியாளார்கள், ஏற்றுமதியாளர்கள் தங்கள் தயாரிப்புகளை ‘பாரத் மார்ட்’ மூலம் உலகம் முழுவதும் சந்தைப்படுத்தலாம்.

எனவே, இந்த திட்டத்தில் அனைவரும் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் வர்த்தகங்களை அதிகரிக்க இந்த தளத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 18.25 சதவீதம் அதிகரித்து 35.63 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. இரு நாடுகளும், 2030-க்குள் எண்ணெய் அல்லாத இருதரப்பு வர்த்தகத்தில் நூறு பில்லியனை எட்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது.

‘பாரத் மார்ட்’ மூலம் உலகம் முழுவதும் இந்தியப் பொருட்கள் விரைவாக வாடிக்கையாளர்களைச் சென்றடையும். துபாய் உலகெங்கிலும் நல்ல உறவை கொண்டிருக்கிறது. எனவே, இந்திய தயாரிப்புகள் துபாயில் அமைக்கப்பட்டுள்ள ‘பாரத் மார்ட்’ மூலம், உலகெங்கிலும் கிடைக்க வழிவகை செய்யும்” என்றனர்.

SCROLL FOR NEXT