குருகிராம்: சொமேட்டோ உணவு டெலிவரி நிறுவனம் பிற்பகல் நேரங்களில் ஆர்டர் செய்வதை தவிர்க்குமாறு தங்களது வாடிக்கையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அவசியம் இருந்தால் மட்டும் இந்த நேரத்தில் ஆர்டர் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் வரலாறு காணாத வெப்ப அலை வீசி வருகிறது. சென்னை, டெல்லி, மும்பை என இந்தியாவின் முக்கிய நகரங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்தச் சூழலில் சொமேட்டோ பதிவு ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்தது.
“தயவு செய்து வெயில் உச்சத்தில் இருக்கும் மதிய நேரத்தில் ஆர்டர் செய்வதைத் தவிர்க்கவும்” என சொமேட்டோ தெரிவித்தது. அந்த பதிவுக்கு இணையதள பயனர்கள் மற்றும் சொமேட்டோ வாடிக்கையாளர்கள் இதற்கு கலவையான கமெண்ட்களை வழங்கி வருகின்றனர்.
பயனர்களின் பதில்கள்: “உணவு டெலிவரி செய்யும் நிறுவனம் ஆர்டரை தவிர்ப்பது நல்லதல்ல. இது சிறந்த யோசனையும் அல்ல. அதற்கு பதிலாக டெலிவரி பணியில் ஈடுபட்டுள்ள பிரதிநிதிகளை வெப்ப அலையில் இருந்து காப்பது குறித்து மாற்று வழியில் யோசிக்கலாம்”, “உங்களுக்கு ஊழியர்கள் மீது அக்கறை இருந்தால் எங்களது சேவை மதிய நேரங்களில் இல்லை என பதிவு போடுங்கள்”, “அப்படி என்றால் நான் உங்களது செயலியை டெலிட் செய்கிறேன்”. “உணவு டெலிவரி நிறுவனங்களை நம்பி இருக்கும் நபர்களுக்கு இது சாத்தியமே இல்லை” என கமெண்ட் செய்துள்ளனர்.
இன்றைய டிஜிட்டல் உலகில் பெரும்பாலான மக்கள், தாங்கள் பயன்படுத்தி வரும் போனில் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தால், நேரடியாக உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களின் செயலிகளை பயன்படுத்தி வரும் பயனர்களாக இருப்பார்கள். அதன் வழியே பசித்த நேரத்தில் தங்களுக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்து பசியை ஆற்றி கொள்ள முடியும். இந்த நுகர்வு கலாச்சாரம் இந்தியா முழுவதும் பரவலாக காணப்படுகிறது. இதில் சொமேட்டோ நிறுவனமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.