மதுரை: மதுரையில் சின்ன வெங்காயம் விலை உயர்ந்துள்ளது. மொத்த விற்பனை கடைகளில் கிலோ ரூ.75-க்கும், சில்லறை விற்பனை கடைகளில் ரூ.85-க்கும் விற்பனையாகிறது.
தமிழகம் முழுவதும் காய்கறிகள் வரத்து குறைவால் அதன் விலை அதிகரித்துள்ளது. ஆனால், மதுரையில் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலை குறையத் தொடங்கி உள்ளது. நேற்று கேரட் கிலோ ரூ.20 முதல் ரூ.50, பீட்ரூட் ரூ.30 முதல் ரூ.50, முட்டைக்கோஸ் ரூ.30, கோவக்காய் ரூ.30, சவ்சவ் ரூ.25, பீர்க்கங்காய் ரூ.40 முதல் ரூ.60, சுரைக்காய் ரூ.20 முதல் ரூ.50, வெண்டைக்காய் ரூ.20 முதல் ரூ.30, கத்தரிக்காய் ரூ.30 முதல் ரூ.50, தக்காளி கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனையானது.
மொத்த விற்பனை கடைகளில் சின்ன வெங்காயம் ரூ.60 முதல் ரூ.75 வரை விற்பனையானது. சில்லறை விற்பனை கடைகளில் ரூ.85 முதல் ரூ.90 வரை விற்பனையாகிறது. பெரிய வெங்காயம் ரூ.20 முதல் ரூ.35 வரை விற்பனையாகிறது. சின்ன வெங்காயம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதற்கு பதிலாக பொதுமக்கள் பெரிய வெங்காயத்தை வாங்கி பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.