கோவை: மூலப்பொருள்களின் விலை உயர்வால் பம்ப் செட்கள் 7 சதவீதம் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது என பம்ப் செட் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
இது குறித்து, இந்திய பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.வி.கார்த்திக், தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் டி.விக்னேஷ், ராஜ் கோட் பொறியியல் சங்கத்தின் இயக்குநர் வினோத் பாய் அசோதரியா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வேளாண்மை துறை மற்றும் குடிநீர் வழங்கல் பிரிவில் அதிகரித்துள்ள தேவையால், இந்திய பம்ப் தொழில் 10 சதவீதத்துக்கும் அதிகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.
விவசாய பம்புகள், வீட்டு உபயோக பம்புகள், வணிக கட்டிடங்கள், கழிவுநீர் பம்புகள், தொழிற்சாலைகள், ரசாயன பம்புகள் மற்றும் மின் உற்பத்திக்கான பம்புகள் உள்ளிட்ட பிரிவுகள் நல்ல வளர்ச்சியை கண்டிருப்பது இதுவே முதல் முறையாகும். ஆனால், மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பால், பம்ப் செட் துறையில் பெரிய மகிழ்ச்சி ஏற்படவில்லை.
செம்பு, இரும்பு மற்றும் இதர பொருட்களின் விலை அதிகரிப்பால், பம்ப்செட் உற்பத்தி செலவு 10 சதவீதத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளது. இதை ஈடுகட்டும் வகையில், பம்ப் செட் உற்பத்தியாளர்கள் விலையை 5 முதல் 7 சதவீதம் வரை உயர்த்தியுள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.