சென்னை: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ (EPFO) பயனர்கள் முன்பணம் பெறுவதற்கான விதிமுறைகளை எளிதாக்கியிருக்கிறது. அதன்படி, இனி விண்ணப்பித்த 3 நாட்களில் முன்பணம் பெற முடியும்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ 6 கோடிக்கும் மேற்பட்ட சந்தாதாரர்களை கொண்டுள்ளது. பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டு வரும் இபிஎஃப்ஓ, சமீபத்தில் பயனர்கள் முன்பணம் பெறுவதற்கான விதிமுறைகளை எளிதாக்கியிருக்கிறது. அதன்படி, கல்வி, திருமணம் மற்றும் வீடு கட்டுவது போன்ற கோரிக்கைகளுக்கு முன்பணம் பெற ஆட்டோ-மோட் செட்டில்மென்ட் எனப்படும் தானியங்கி முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த தானியங்கி முறையில், முன்பண விண்ணப்பங்கள் எந்தவித மனித தலையீடுகள் இல்லாமல் பரிசீலிக்கப்படும். இணையதள வழியாக உரிய ஆவணங்கள் கொண்டு விண்ணப்பித்தால் தானியங்கி முறையில் பரிசீலனை செய்யப்படும். ரூ.1 லட்சம் வரை முன்பணம் பெற விண்ணப்பித்தால் 3 நாட்களில் பணம் வங்கிகளில் வரவு வைக்கும் வகையில் விதிகள் எளிதாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள இபிஎஃப்ஓ, "அனிருத் பிரசாத் என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக முன்பணம் கோரி விண்ணப்பித்தார். தானியங்கி முறையில் அவரது கோரிக்கை 3 நாட்களுக்குள் தீர்க்கப்பட்டது." என்று தெரிவித்துள்ளது. மேலும், நடப்பு ஆண்டில், சுமார் 2.25 கோடி உறுப்பினர்கள் இந்த வசதியின் பலனைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் இபிஎப்ஓ தெரிவித்துள்ளது.