கிருஷ்ணகிரி: உள்ளூரில் மகசூல் பாதிப்பால், காவேரிப்பட்டணம் மண்டிகளுக்கு வெளி மாநிலங்களில் இருந்து மாங்காய்கள் விற்பனைக்கு வந்துள்ளன. வழக்கத்தைவிட மாங்காய்களின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பர்கூர், போச்சம்பள்ளி, சூளகிரி, ஓசூர், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் 35 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மாங்காய் சாகுபடி செய்யப்படுகிறது. இதில், மல்கோவா, செந்தூரா, இமாம் பசந்த், பெங்களூரா, மல்லிகா, பீத்தர், பங்கனப்பள்ளி உள்ளிட்ட, 40-க்கும் மேற்பட்ட மா ரகங்கள் விளைவிக்கப்படுகிறது. மழையின்மை, கடும் வெயிலால் ஏற்பட்டுள்ள வறட்சி உள்ளிட்ட காரணங்களால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா சாகுபடி சுமார் 80 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளது. இறவை சாகுபடியில் விளைந்த மாங்காய்கள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.
தாமதமாக தொடக்கம்: இந்நிலையில், காவேரிப் பட்டணத்தில் மா மண்டிகளில் வழக்கமாக ஏப்ரல் மாத இறுதியில் தொடங்கப்படும் மா ஏலம், நிகழாண்டில் தாமதமாக தொடங்கி உள்ளது. உள்ளூரில் மா விளைச்சல் பாதிப்பால், வெளிமாநிலங்களில் இருந்து விவசாயிகள் மாங்காய்களை விற்பனைக்காக, காவேரிப்பட்டணம் மண்டிகளுக்கு எடுத்து வந்து ஏலம் விடுகின்றனர்.
இது குறித்து மா விவசாயிகள், வியாபாரிகள் கூறும்போது, மா விவசாயிகள் தொடர் இழப்பினை சந்தித்து வரும் நிலையில், நிகழாண்டிலும் மா விவசாயம் கைகொடுக்கவில்லை. மா மகசூல் பாதிப்பால் விலை உயர்ந்துள்ளது. தோட்டங்களில் அறுவடை செய்யப்படும் மாங்காய்கள், காவேரிப்பட்டணத்தில் உள்ள மண்டிகளில் ஏலம் விடப்பட்டு, உள்ளூர் மற்றும் வெளி மாவட்டம், மாநிலங்களுக்கு வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.
தரத்துக்கு ஏற்ப விலை: மேலும், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து விவசாயிகள் தங்களது தோட்டங்களில் விளையும் மாங்காய்களை, காவேரிப்பட்டணத்திற்கு விற்பனை கொண்டு வருகின்றனர். இங்கு தரத்தை பொறுத்து 30 கிலோ மாங்காய்கள் கொண்ட ஒரு கூடை ஏலம் விடப்பட்டு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
அதன்படி, மல்கோவா ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.4,500 வரையிலும், செந்தூரா ரூ.400 முதல் ரூ.1,500 வரையிலும், பெங்களூரா ரூ.800 முதல் ரூ.1,200 வரையிலும், அல்போன்சா ரூ.800 முதல் ரூ.2,000 வரையிலும், பீத்தர் ரூ.500 முதல் ரூ.1,000 வரையிலும் ஏலத்தில் மொத்த வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். உள்ளூர் வியாபாரிகளும் வாங்கிச் சென்று சில்லரை விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர், என்றனர்.