உ
ங்கள் மனவலிமையை மட்டுமே வைத்துக்கொண்டு உங்களால் வெற்றி பெற்றுவிட முடியாது. உங்களது உடல் எடையை குறைக்கவோ அல்லது மற்றவர்களுடனான உங்களது உறவுமுறைகளின் மேம்பாட்டிற்கோ அல்லது உங்களது பணியில் இன்னும் அதிக உயரத்தை அடைவதற்கோ, மனவலிமையையும் மட்டுமே நம்பியிருந்தால் நிச்சயம் அது தோல்வியிலேயே முடியும். மனவலிமையைம் தாண்டி உங்களுக்குள் மறைந்துள்ள வெற்றிக்கான விஷயங்களை வெளிக்கொண்டு வருவதன் மூலமாக பெரும் சாதனை படைக்கலாம் என்கிறார் “வில்பவர் டஸ்ன்ட் வொர்க்” என்னும் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் “பெஞ்சமின் ஹார்டி”.
புத்தாண்டு தீர்மானம் என்ற விஷயத்தைப்பற்றி நாம் அனைவரும் நன்றாகவே உணர்ந்தும் அறிந்தும் இருப்போம் அல்லவா!. ஜனவரியில் மேற்கொள்ளப்படும் இந்த தீர்மானங்கள், பிப்ரவரிக்குள்ளாகவே நீர்த்துப்போவதற்கான காரணங்கள்தான் என்ன?. இலக்கை மட்டும் சவுண்டாக செட் செய்துவிட்டு, செயல்பாட்டில் சைலென்டாக இருந்துவிடுவதே இதற்கான காரணம். உதாரணமாக, உடல் பருமன் என்ற உலகளாவிய பிரச்சினையை எடுத்துக்கொள்ளுங்கள். அதிகப்படியான மக்கள் உடல் எடை குறைப்பிற்காக, உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி என மெனக்கெட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இருப்பினும், 2025-ம் ஆண்டில் ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமான உலக மக்கள் அதிகப்படியான உடல் பருமனால் பாதிக்கப்பட்டிருப்பர் என்பது உலகளாவிய சுகாதார நிபுணர்களின் கருத்து. இதற்கு உடலமைப்பு, மரபணுக்கள், பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கைமுறை என பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், நமது சூழலையும் அதில் நடக்கும் விஷயங்களையும் மாற்றியமைத்து செயல்படுதலே இதற்கான தீர்வாக அமையும்.
இலக்கை நிர்ணயித்துவிட்டு, அதற்கேற்ற சூழலை அமைத்துக்கொள்ளாமல், வெறுமனே போராடுவதால் எவ்வித பலனும் ஏற்படப்போவதில்லை. இதில் நமது உழைப்பும் அதற்காக நம்மால் செலவிடப்படும் காலநேரமும் வீணாவதைத் தவிர, வேறு ஒன்றும் பெரிதாக உபயோகமில்லை. சிப்ஸ் சாப்பிடவேண்டும் என்று ஆசைப்படுகிறோம், அதேநேரம் நமது உடலும் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறோம். அதற்கு என்ன செய்யவேண்டும்? நமது கவனத்தை வேறு செயல்களில் திசைத்திருப்ப வேண்டுமே தவிர, அதே சிப்ஸ் விளம்பரத்தை டிவியில் பார்த்துக்கொண்டிருக்கக்கூடாது அல்லவா!. நமது குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடவேண்டும் என்று ஆசைப்படுகிறோம், ஆனால் கிடைக்கும் நேரத்தை ஸ்மார்ட்போனில் செலவிடுவதை நம்மால் நிறுத்தமுடிவதில்லையே. இதுதான் பிரச்சினை.
நம்மைச்சுற்றி உள்ள சூழ்நிலையானது உண்மையில் அதிக சக்திவாய்ந்தது. தூண்டுதல், வசப்படுத்துதல், அழுத்தம் என சகல ஆற்றல்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இன்றைய உலகில் வெறுமனே சர்வைவ் மட்டும் செய்வதை நிறுத்தி, உண்மையாகவே சக்சஸ்புல்லாக வாழ்வதற்கான ஒரே வழி, உங்கள் சூழலை உருவாக்கவும் அதனை கட்டுப்படுத்தவும் வேண்டும் என்பதே. ஆம், “நாம் நமது சூழலை உருவாக்கவும் கட்டுப்படுத்தவுமில்லை என்றால், நமது சூழலே நம்மை உருவாக்கவும் கட்டுப்படுத்தவும் செய்யும்” என்கிறார் “மார்ஷல் கோல்ட்ஸ்மித்”. நம்மைச்சுற்றி நடக்கும் சிறு சிறு மாற்றங்களே, பெரிய மாற்றங்களை நோக்கி நம்மை வழிநடத்திச் செல்கின்றன என்பதை அடிப்படைக் கருத்தாக வலியுறுத்தியுள்ளார் ஆசிரியர். நாம் யார் என்பதை நமது சூழ்நிலையே தீர்மானிக்கிறது. நம்முள் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமா?, அப்படியானால் நமது சூழலை மாற்றியமைக்க வேண்டும்.
ஒரு திட்டத்தின் மீதான சக்திவாய்ந்த முடிவுகளே, அதனை பெரும் வெற்றிபெறச் செய்கின்றது. ஆக, எந்தவொரு திட்டத்திற்கும் செயல்களுக்கும் இவ்வாறான முடிவுகளை மேற்கொள்வது என்பது அவசியமானது. மிகச் சிறந்த முடிவுகள் நமது வழக்கமான சூழ்நிலையில் கிடைக்கப்பெறுவதில்லை என்பது பல்வேறு ஆராய்ச்சிகளின் முடிவாக உள்ளது என்கிறார் ஆசிரியர். நமது அன்றாட வழக்கமான சூழலை தவிர்த்து, புதியதொரு சூழலில் நமக்கான செயல்பாடுகளை திட்டமிடும்போது மட்டுமே, நமது மூளை திடமான முடிவுகளை அளிக்கும் என்பதே ஆசிரியரின் வாதமாக இருக்கின்றது.
நமது நுண்ணறிவானது, வீடு அல்லது பணியிடத்தைவிட முற்றிலும் புதியதொரு இடத்திலேயே, நம்மைச்சுற்றி நடக்கும் விஷயங்களின் மீது அதிக கவனம் செலுத்தும். தினசரி நாம் உபயோகப்படுத்தும் சூழ்நிலையை கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டு, புதியதோர் சூழலை அவ்வப்போது பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மீண்டும் நமது வழக்கமான சூழலுக்கு திரும்பும்போது, நமது செயல்களில் அதிக புத்துணர்வுடன் கவனம் செலுத்தமுடியும்.
ஒரு பறவை முட்டையிலிருந்து வெளிவருவதற்கு பெரும் போராட்டத்தை மேற்கொள்வதை அறிந்திருப்பீர்கள். அந்த முட்டையின் ஓட்டினை உடைக்க பெருமுயற்சி தேவைப்படும் அந்த பறவைக்கு. அதனைப் பார்க்கும்போது, அந்த ஓட்டினை உடைத்து அந்த பறவை வெளிவர உதவலாமா என்றுகூட நமக்கு தோன்றலாம். உண்மையில் நாம் அப்படி செய்தால், அது அந்த பறவைக்கான நீண்டகால நன்மையாக இருக்காது என்கிறார் ஆசிரியர். அவ்வளவு ஏன், அது இறந்துபோவதற்கான வாய்ப்புகளே இதில் அதிகம். ஏனென்றால் முட்டையின் ஓட்டை உடைக்கும் போராட்டமானது, அந்த பறவைக்கு வாழ்வதற்கான வலிமையைத் தருகிறது. மாறாக நாம் அந்த பறவைக்கு உதவும்போது, நீண்டகால நோக்கில் அது பலவீனமாகவும், வேறு ஒன்றை சார்ந்தே வாழும் நிலையையும் அந்தப் பறவையிடம் ஏற்படுத்திவிடும்.
சிறந்த மனிதனாக ஆகவேண்டும் என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. அதற்கான போராட்டங்களை சந்தித்தாகவே வேண்டும் என்பது நாம் அறிந்ததே. அதிலும் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், போராட்டத்திற்கான முயற்சிகள் முழுக்க முழுக்க நம்மால் மேற்கொள்ளவேண்டியதாக இருக்கவேண்டும். அம்மாதிரியான சூழ்நிலைகளில் மட்டுமே நம்மால் அதிக ஆற்றலைப் பெறமுடிகிறது. அது நம்மை வலுப்படுத்தி, வாழ்வில் மேலும் மேலும் முன்னேறிசெல்ல உதவும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
மிகச்சிறந்த வாழ்க்கைக்கான மற்றுமொரு பயனுள்ள ஏற்பாடு, நமக்கான வரம்புகளை ஒவ்வொரு விஷயத்திலும் நிர்ணயித்துக்கொள்வது. அந்தந்த செயலுக்கு ஏற்றவாறு அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வரம்புகளை நமக்குநாமே வைத்துக்கொள்வது என்பது நிச்சய வெற்றிக்கான அடிப்படை. ஐம்பது இ-மெயில்களுக்கு மேலாக இன்பாக்ஸில் வைத்துக்கொள்வதில்லை, ஒரு வாரத்திற்கு நாற்பது மணிநேரங்களுக்கு மேலாக வேலை செய்வதில்லை, ஒரு நாளைக்கு பத்து நிமிடங்களுக்கு மேலாக ஃபேஸ்புக் பார்ப்பதில்லை, மாதத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் ஒரு பைசாகூட அதிகமாக செலவு செய்வதில்லை, வாரத்திற்கு மூன்று தடவைகளுக்கு மேல் வெளியில் உணவு சாப்பிடுவதில்லை ஆகியவற்றை அதிகபட்ச வரம்பிற்கான உதாரணங்களாகக் கூறலாம்.
குறைந்தது மாதத்திற்கு ஒருமுறையாவது ஒரு நல்ல ட்ரிப் போகவேண்டும், குறைந்தது வாரத்திற்கு முப்பது கிலோமீட்டர்கள் ரன்னிங் செல்ல வேண்டும், வாரத்திற்கு ஒருமுறையாவது வீட்டில் ஏதேனும் ஒரு டிஷ்சை சமைக்க வேண்டும் என்பனவற்றை குறைந்தபட்ச வரம்பிற்கான உதாரணங்களாகக் கூறலாம். நிர்ணைக்கப்பட்ட வரம்புகளை, தெளிவான சூழலுடன் இணைந்து சரியாக கடைபிடிக்கும்போது அனைத்தும் நம் வசமே.
p.krishnakumar@jsb.ac.in