பழநி: தரமற்ற பட்டுப்புழு முட்டை, பட்டுக்கூடு விலை சரிவு காரணமாக பழநி பகுதியில் விவசாயிகள் பட்டுப் புழுக்களை தீ வைத்து அழித்து வருகின்றனர்.
திண்டுக்கல், சாணார்பட்டி, ஒட்டன்சத்திரம், பழநி ஆகிய பகுதிகளில் 4,000 ஏக்கர் பரப் பளவில் மல்பெரி சாகுபடி நடைபெறுகிறது. இப்பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட பட்டுப்புழு வளர்ப்பு மனைகள் உள்ளன. வெண்பட்டுக்கூடு உற்பத்தியில் 2,500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களாக அரசு சார்பில் வழங்கப்படும் தரமற்ற பட்டுப்புழு முட்டைகளால், பட்டுக்கூடு கட்டாமல் புழுக்கள் இறந்து விடுதல், பட்டுக்கூடு உருவாகும்போது பாதியிலேயே புழுக்கள் இறந்து விடுதல், தண்ணீர் பற்றாக்குறை மற்றும் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக பட்டுக்கூடு உற்பத்தி பாதித்துள்ளது.
உற்பத்தி மட்டுமின்றி விலையும் சரிவை சந்தித்துள்ளது. சென்ற ஆண்டு இதே மாதம் ஒரு கிலோ பட்டுக்கூடு ரூ.700 முதல் ரூ.800 வரை விற்றது. ஆனால், தற்போது ஒரு கிலோ பட்டுக்கூடு ரூ.400 வரை விற்பனையாகிறது. இதனால் விரக்தி அடைந்துள்ள விவசாயிகள் தரமற்ற மற்றும் பட்டுக்கூடு கட்டாத பட்டுப்புழுக்களை தீ வைத்து அழித்து வருகின்றனர்.
இது குறித்து தமிழ்நாடு பட்டுக்கூடு உற்பத்தி விவசாயி கள் நலச்சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் ப.செல்வராஜ் கூறியதாவது: வெயிலின் தாக்கம் அதிகரிப்பு, காற்றில் ஈரப்பதம் குறைவு, தரமற்ற பட்டுப்புழு முட்டை மற்றும் இளம் புழுக்கள் காரணமாக பட்டுக்கூடு உற்பத்தி தமிழகம் முழுவதும் பாதிப்படைந்துள்ளது.
இது தவிர, பட்டுக்கூடு விலை யும் ஒரு கிலோவுக்கு ரூ.300 வரை வீழ்ச்சி அடைந்துள்ளது. வேலையாட்கள் கூலி, பராமரிப்பு, உற்பத்தி மற்றும் போக்குவரத்துச் செலவு அதிகரித்து வருகிறது. ஆனால், பட்டுக் கூடுக்கு மட்டும் நிரந்தர விலை இல்லை. உற்பத்தி செய்த செலவுக்கு கூட விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளது.
தரமற்ற மற்றும் கூடு கட் டாத பட்டுப்புழுக் களை குப்பையில் கொட்டுதல் மற்றும் தீ வைத்து அழிக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். காப்பீடுக்கான பிரீமியத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், இழப்பீடுக்கான தொகையை அதிகரிக்கவில்லை. அதே சமயம் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைப்பதிலும் கால தாமதமாகிறது.
கர்நாடக மாநிலத்தில் பட்டுக் கூடு விலை குறையும் போது ஒரு கிலோ பட்டுக்கூடுக்கு ஊக்கத் தொகையாக ரூ.30, போக்குவரத்துச் செலவுக்காக ஒரு கிலோ பட்டுக்கூடுக்கு ரூ.10, நூறு இளம் புழுக்களை வாங்கி வளர்த்தால் ரூ.1,000 மானியமாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்திலும் இதை நடை முறைப்படுத்த வேண்டும் என்று கூறினார்.