கோப்புப்படம் 
வணிகம்

ஜிஎஸ்டி வசூல் முதல் முறையாக ரூ.2 லட்சம் கோடியை தாண்டியது

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஜிஎஸ்டி வசூல் புதிய உச்சம் தொட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வலுவான உள்நாட்டுப் பரிவர்த்தனை மற்றும் இறக்குமதி காரணமாக ஜிஎஸ்டி வசூல் உயர்ந்திருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ.1.87 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலானது. இந்நிலையில், இவ்வாண்டு ஏப்ரலில் 12.4 சதவீதம் உயர்ந்து ரூ.2.10 லட்சம் கோடி வசூலாகியுள்ளது.

மத்திய ஜிஎஸ்டி ரூ.43,846 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.53,538 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.99,623 கோடியாக உள்ளது. செஸ் வசூல் ரூ.13,260 கோடியாக உள்ளது.

ரீஃபண்ட் வழங்கப்பட்ட பிறகான நிகர ஜிஎஸ்டி வசூல் ரூ.1.92 லட்சம் கோடியாக உள்ளது. சென்ற ஆண்டு ஏப்ரலுடன் ஒப்பிடுகையில் இது 15.5 சதவீதம் அதிகம் ஆகும்.

ஜிஎஸ்டி வசூல் உயர்ந்திருப்பது உள்நாட்டு தொழில் மேம்பட்டு இருப்பதைக் காட்டுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் உள்நாட்டு பரிவர்த்தனை 13.4 சதவீதமும் இறக்குமதி 8.3 சதவீதமும் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

நாடு முழுவதும் ஒரே வரி முறையைக் கொண்டு வரும் நோக்கில் மத்திய அரசு 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் ஜிஎஸ்டியை நடைமுறைப்படுத்தியது. இந்நிலையில், தற்போது முதன்முறையாக ஜிஎஸ்டி வசூல் ரூ.2 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. 2017 ஜூலை முதல் 2024 ஏப்ரல் வரையில் ஜிஎஸ்டி வசூல் ஆண்டுக்கு சராசரியாக 13 சதவீதம் அதிகரித்துள்ளது,

2023-24 நிதி ஆண்டில் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.20.18 லட்சம் கோடியாக உள்ளது. 2022-23 நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 11.7 சதவீதம் அதிகம் ஆகும்.

SCROLL FOR NEXT