சென்னை: கோடை வெயிலின் தாக்கம் காரணமாக, ஆவின் மோர்,லஸ்ஸி, ஐஸ்கிரீம் உற்பத்தி 20 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆவின் நிறுவனம் வாயிலாக பால் மட்டுமின்றி, வெண்ணெய், நெய், தயிர் ஐஸ்கிரீம் உட்பட 220-க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் தயாரிக்கப் படுகின்றன. தற்போது கோடை வெயிலின் தாக்கம் காரணமாக, மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். மோர்,லஸ்ஸி, பழரசம் உள்ளிட்ட வைகளுக்கு தேவை அதிகரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு ஆவினில் தயிர், மோர், லஸ்ஸி உள்ளிட்டவற்றின் உற்பத்தியை ஆவின் நிறுவனம் அதிகரித்துள்ளது.
இது குறித்து ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் ஆவின் மோர், லஸ்ஸி, ஐஸ் கிரீம் விற்பனை அதிகரித்துள்ளது. ஆவின் மோர் பொறுத்தவரை தினசரி 40,000 மோர் பாட்டில்களும், 10,000 மோர் பாக்கெட்களும் விற்பனை செய்யப் படுகின்றன. இது தவிர, லஸ்ஸி, தயிர், ஐஸ் கிரீம் ஆகியவற்றின் விற்பனை பல மடங்குஉயர்ந்துள்ளது. வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.