வணிகம்

சிங்கப்பூரை தொடர்ந்து இந்திய எம்டிஎச், எவரெஸ்ட் நிறுவனங்களின் மசாலா பொடிகளுக்கு ஹாங்காங் தடை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: எம்டிஎச் மற்றும் எவரெஸ்ட் ஆகிய இந்திய நிறுவனங்கள் சிக்கன், மட்டன், மீன், சாம்பார் உட்பட பல்வேறு உணவுகளை தயாரிக்க மசாலா பொடிகளை விற்பனை செய்து வருகின்றன. உள்நாடு மட்டுமன்றி பல்வேறு வெளிநாடுகளுக்கும் அந்த மசாலா பொடிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்நிலையில், எவரெஸ்ட் நிறுவனத்தின் மீன் மசாலாவில் அளவுக்கு அதிகமாக ‘எத்திலீன் ஆக்சைடு’ கலந்திருப்பதாகவும், அதனால் அந்த மசாலா பொருட்களை திரும்ப பெறுவதாகவும் கடந்த வாரம் சிங்கப்பூர் அரசு அறிவித்தது.

இந்நிலையில் எம்டிஎச் பிரைவேட் லிமிடெட் மற்றும் எவரெஸ்ட் புட் புராடெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களின் மசாலா பொருட்களுக்கு ஹாங்காங் அரசும் தடை விதித்துள்ளது. ஹாங்காங்கின் உணவு பாதுகாப்பு மையம் வழக்கமான ஆய்வு மேற்கொண்ட போது மசாலா பொருட்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட எத்திலீன் ஆக்சைடு ரசாயனம் அதிகளவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

குறிப்பாக ‘மெட்ராஸ் கர்ரி பவுடர்’, ‘சாம்பார் மசாலா பவுடர்’, ‘கர்ரி பவுடர்’ ஆகிய 3 மசாலா பொருட்களில் அதிகளவு ரசாயனம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்து கலந்திருந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து இந்த மசாலா பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டள்ளது.

இந்த 3 மசாலாக்களின் மாதிரிகளை சில கடைகளில் இருந்து எடுத்து ஆய்வு செய்த பிறகே ஹாங்காங் உணவு பாதுகாப்பு மையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த மசாலாக்களை விற்க வேண்டாம் என்று தங்கள் விற்பனை நிலையங்களுக்கு ஹாங்காங் அரசு உத்தரவிட்டுள்ளது.

இரண்டு நிறுவனங்களில் மசாலா பொருட்களில் கலந்துள்ள ரசாயனம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளால் உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்படும். புற்றுநோய், மார்பக புற்றுநோய் உட்பட பல்வேறு உடல் பாதிப்புகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்று ஹாங்காங் எச்சரித்துள்ளது.

ஏற்கெனவே, சல்மோனெல்லா என்ற ஒரு வகை பாக்டீரியா இருப்பதாக கூறி கடந்த ஆண்டு எவரெஸ்ட் நிறுவன உணவுப் பொருட்களுக்கு அமெரிக்கா தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT