மதுரை: மதுரையில் எலுமிச்சை பழம் விலை உயர்ந்துள்ளது. ஒரு பழம் ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனையாகிறது.
சித்திரைத் திருவிழாவில் மண்டபக படிகளிலும், பொது இடங்களிலும் அன்னதானம், எலுமிச்சை ஜூஸ், மோர் போன்றவை பக்தர்களுக்கு வழங்கப் படுவது வழக்கம். அதனால், சித்திரைத் திருவிழா நாட்களில் காய்கறிகள், பழங்கள் விற்பனை அதிகரிக்கும். தற்போது சித்திரைத் திருவிழா நடைபெற்று வரும் நிலையில், மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட், சில்லறை விற்பனை கடைகளில் காய்கறிகள், எலுமிச்சை பழம் விலை உயர்ந் துள்ளது.
ஒரு எலுமிச்சைப் பழம் ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனையானது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘‘எலுமிச்சை சாதம், எலுமிச்சை பழச்சாறு போன்றவற்றை தயார் செய்து சித்திரைத் திருவிழாவில் பக்தர்களுக்கு வழங்குகின்றனர். மேலும் பூஜைக்காகவும் எலுமிச்சை பழங்களை அதிகளவில் வாங்கி செல்கின்றனர். அதனால் அவற்றின் விலை அதிகரித்துள்ளது.
அதோடு காய் கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. தக்காளி கிலோ ரூ.25 முதல் ரூ.35, கத்தரிக் காய் கிலோ ரூ.40, வெண்டைக் காய் ரூ.40, புடலங்காய் ரூ.40 முதல் ரூ.50, பீர்க்கங்காய் ரூ.40 முதல் ரூ.50, அவரை ரூ.100, முருங்கை பீன்ஸ் ரூ.100 முதல் ரூ.120, நெல்லிக்காய் ரூ.50 முதல் ரூ.60, கேரட் ரூ.50, பட்டர் பீன்ஸ் ரூ.120, பீட்ரூட் ரூ.30 முதல் ரூ.50 உருளை கிழங்கு ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனையானது என்று கூறினர்.