வணிகம்

வணிக நூலகம்: சிறிய செயல்கள் கூட்டு விளைவுகள்

ஆர்.வேங்கடபதி

ரன் ஹார்டி ( DARAN HARDY) என்னும் நூல் ஆசிரியர் ஆமை முயல் கதையைப் பற்றி சொல்லிவிட்டு எவ்வாறு பல வகையான செயல்கள் ஒன்று படும் பொழுது கூட்டு விளைவுகள் நன்மை தருகின்றன என்பதைப் பற்றி மிக அழகாக எடுத்துக் கூறுகிறார். மற்றொரு கோணத்தில் மிக பெரிய கடினமான செயல்களை ஒன்றாகச் செய்வதைக் காட்டிலும் பலவகையான சிறிய செயல்களை செய்து முடித்து எளிமையான முறையில் வெற்றியடைவது மிகவும் சிறந்தது என்று கூறுகிறார். வாழ்க்கையை மாற்ற வேண்டுமானால் நாம் செய்ய கூடிய சிறிய செயல்களை சரியான முறையில் வடிவமைத்து ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தி வெற்றியடைய வேண்டும். பல நிகழ்வுகளின் கலவைகள் எதிர்காலத்தில் வாழ்க்கையின் போக்கை மாற்றும். அப்போது வாழ்க்கை மாறியதாக கூறுவோமே தவிர பல காரணிகள் அந்த செயல் நிறைவேறுவதற்கு துணைபோனதாகக் கூறுவதில்லை.

மூன்று வகையான பாடங்களை நூலாசிரியர் கற்றுத்தருகிறார். யாருக்கும் தெரியாத, புரியாத பாடங்கள் அல்ல மாறாக அனைவருக்கும் தெரிந்த சிறிய செயல்பாடுகள் எவ்வாறு பெரிய நிகழ்வுகளை ஏற்படுத்துகின்றன என்பதை பற்றி விளக்கமாகக் காணலாம்.

1. வாழ்க்கையின் இலக்குகளை தினசரி பழக்க வழக்கங்களால் இணைத்து மாற்ற வேண்டும்.

2. திரும்பத் திரும்ப செய்யக் கூடிய செயல்களைத் தொடர்ந்து செய்து செயல்களில் வேகத்தைக் கூட்ட வேண்டும்.

3. உச்சம் தொட்ட பின்பு வேகம் குறைந்தால் மாற்று செயல்கள் மூலம் மனதையும், செயல்களையும் வேகப்படுத்துதல் வேண்டும். வாழ்க்கையின் இலக்குகளை தினசரி பழக்க வழக்கங்களால் இணைத்து மாற்ற வேண்டும்.

எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதையும் செய்து முடிக்க முடியாது. எடுப்பதற்கு வழிகளை ஆராய்ந்து கவிழ்ப்பதற்கு முறைகளைத் தெரிந்து ஒவ்வொன்றாக செய்யும் பொழுது ஒரே சுற்றில் வேகமாக செய்து முடிக்க முடியும். ஆனால், திடீரென்று நாளை முதல் ஒரு செயலை செய்ய முடியாது என்று முடிவு எடுத்து அதைச் செயல்படுத்த முடியாது. அந்தச் செயல்களில் உள்ள பல கூறுகளை ஒவ்வொன்றாகத் தவிர்த்து வந்தால் முழு செயலையும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மொத்தமாகத் தவிர்த்து விட முடியும். அதே போல நேர்மறை செயல்களையும் படிக்கட்டுகளை போல ஒவ்வொன்றாக அடுக்கி கொண்டே போனால் வாகை சூட முடியும். உதாரணமாக எழுத்தாளராக ஆவதற்கு ஒரு நாவலை எழுதி முடிக்க உடனடியாக முனைந்தால் தோல்வி மட்டும் அல்ல துவண்டும் போக முடியும். தினந்தோறும் 250 வார்த்தைகள் வீதம் ஒவ்வொரு படியாக கட்டினால் படிகள் கட்டி முடிக்கும் ஆயாசம் தெரியாது. கட்டி முடித்ததால் கிடைத்த வெற்றி அடுத்த சாதனைக்கு அழைத்துச் செல்லும்.

தினந்தோறும் சரியான பழக்க வழக்கங்களை மட்டுமே தேடிக் கண்டுபிடிக்க முடியாது. அவைகளில் ஏதேனும் ஒன்று மனதிற்கு பிடித்து செயல்பாட்டிற்கு உகந்ததாக இருந்தால் அவைகளை மட்டும் தேர்வு செய்து படிகளை உருவாக்கினால் மிகப் பெரிய செயலை மிக எளிதாக செய்து முடிக்க முடியும். வாழ்க்கையின் இலக்குகளை ஒரே நேரத்தில் சென்று அடைய முடியாது. அது போன்ற நேரங்களில் கலவையான செயல்கள் படிப்படியாக நகர்த்தி உச்சிக்குக் கொண்டு செல்லும். சில நேரங்களில் சோதனை செய்து பார்க்கும் பொழுது சில செயல்களைத் தினமும் செய்யும் பொழுது சிரமமும், குழப்பமும் காணாமல் போகும்.

திரும்பத் திரும்ப செய்ய கூடிய செயல்களைத் தொடர்ந்து செய்து செயல்களில் வேகத்தைக் கூட்ட வேண்டும்.

திரும்பத் திரும்ப செய்யக் கூடிய செயல்களைச் செய்யும்பொழுது அந்தக் கலவையான நிகழ்வுகள் வேகத்தைக் கூட்டும். வேகம் அதிகமாகும் பொழுது விளைவு எளிதாகிறது. இயற்பியல் விதிகளின்படி பனிக்கட்டி கீழ் நோக்கி வரும் பொழுது சிறியதாக மாறுவதில்லை. மாறாக ஒவ்வொன்றையும் இணைத்து இணைத்து வெகு வேகமாக கீழ் நோக்கி வருகிறது. அதைப் போலவே திரும்ப திரும்ப செய்யும் செயல் ஒவ்வொன்றாக இணைந்து நேரம் குறைந்து செயல்களை எளிதில் செய்ய முடிகிறது. ஒரு நல்ல செயலையும் நல்ல பழக்கத்தையும் கைக் கொள்ளும் பொழுது அவை அடுத்தடுத்து நல்ல செயல்களையும் பழக்கங்களையும் இணைத்துக் கொண்டே போகும். ஒரு கெட்ட செயலைத் திரும்பத் திரும்ப செய்யும் பொழுது அவை அடுத்தடுத்து வேகமாக அழிவிற்கும் தோல்விக்கும் வழி வகுக்கும். எனவே, எதிர்மறையைத் தவிர்த்து நேர்மறையில் செயல்படும் பொழுது கலவையான நிகழ்வுகள் வாழ்வின் குறிக்கோளை அடைய உதவுகின்றன.

வேகம் அதிகமாகும் பொழுது செயல்பாடு நிற்பதில்லை. தொடர்ந்து செயல்படும் பொழுது வெற்றி தப்பிப்போவதில்லை. எனவே, வாழ்வின் இலக்குகளை குறிவைத்து செயல்படும் பொழுது ஒவ்வொரு சிறிய செயலின் கலவையும் ஒருங்கிணைக்கப்பட்டு பனிக்கட்டி கீழ் நோக்கி வருவது போல வெற்றியை நோக்கி வேகம் பிடிக்கின்றது. இன்னும் சொல்லப் போனால் உடற்பயிற்சி வகுப்புகளுக்கு வாரத்தில் மூன்று முறை மூன்று வாரங்கள் செல்வதற்கு பதிலாக வாரத்தில் ஐந்து முறை சென்று பாதி பயிற்சிகளை செய்ய முடியாமல் போகும் பொழுது கலவை பாதிக்கப்பட்டு வெற்றி தள்ளிப்போகிறது. உடற்பயிற்சியின் மொத்த விளைவுகளும், இலக்குகளும் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட இடைவேளையில் செய்துகொண்டே இருக் கும் பொழுது மட்டும் வெற்றி வசப்படும்.

உச்சம் தொட்ட பின்பு வேகம் குறைந்தால் மாற்று செயல்கள் மூலம் மனதையும், செயல்களையும் வேகப்படுத்துதல் வேண்டும்.

சில நேரங்களில் வேகத்தைக் கூட்டி உச்சம் தொட்ட பின்பு தொய்வு ஏற்படும். அந்தத் தொய்வு மனதளவிலும் உடல் அளவிலும் வேகத்தைக் கட்டுப்படுத்தும். அது போன்ற நேரங்களில் மாற்றி யோசிப்பதாலும், வேறு வகையான சிறிய செயல்களைச் செய்வதாலும். மாற்றம் ஏற்படுகிறது. அந்த மாற்றம் புத்துணர்ச்சியைத் தூண்டுவதால் அடுத்து செய்ய வேண்டிய செயல்கள் வேகப்படுத்தப்படுகின்றன. உதாரணமாக அர்னால்ட் ஷிவார்ஸ்னேகர் பளுதூக்கும் பயிற்சியில் உச்சத்தைத் தொட்ட பின்பு வேகம் குறைந்து பயிற்சியில் தளர்வு ஏற்பட்டது. அதன் பிறகு அதே நிலையில் செயல்பட இயலாமல் போனது. அது போன்ற நேரங்களில் ஓரளவு எடையைக் குறைத்து முடியும் என்று பளுவைத் தூக்கி சிறிது சிறிதாக உச்சம் தொடும் பொழுது அந்த செயல் நடை முறை சாத்தியப்படுகிறது. அதே போல எடையைக் குறைக்க வேண்டும் என்று சொல்லுபவர்கள் உடனடியாக சதையையும் கொழுப்பையும் வெட்டி வீச முடியாது.

நூறு மீட்டர் ஓட்டப் பந்தயம் ஓடுபவர்கள் முதல் நாளிலேயே நேரத்தை சாதிக்க முடியாது. தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவர்கள் வேறு ஏதேனும் தலைப்பில் சிலவற்றை எழுதும் பொழுது தடைப்பட்ட வேகம் கூடும், முடிக்க பெறாத செயல்கள் முடிக்கப் பெறும். அதைப்போல உச்சம் தொட்ட பின்பு ஏற்படும் தளர்வுகளை உள்வாங்கி சரியான முறையில் பயிற்சிகள் மேற்கொண்டால் கலவையான நிகழ்வுகளின் கூட்டு வெளிப்பாடாக, வெற்றி வந்து சேரும்.

rvenkatapathy@rediffmail.com

SCROLL FOR NEXT