தேன்கனிக்கோட்டை தடிக்கல் பகுதியில் வறண்ட நிலையில் உள்ள மேய்ச்சல் நிலத்தில் சுற்றும் நாட்டின மாடுகள். 
வணிகம்

தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி வட்டங்களில் வறட்சியால் கால்நடை தீவனம் தட்டுப்பாடு

கி.ஜெயகாந்தன்

ஓசூர்: தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி வட்டங்களில் நிலவும் வறட்சியால், கால்நடைகளுக்குத் தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், நாட்டின மாடுகளை விவசாயிகள் விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி ஆகிய வட்டங்களில் உள்ள மலைக் கிராமங்களில் விவசாயம் பிரதானத் தொழிலாக இருந்து வருகிறது. மேலும், சார்பு தொழிலாகக் கால்நடைகள் வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இவ்விரு வட்டங்களிலும், கடந்த சில ஆண்டுகளாக போதிய மழையில்லாததால், வேளாண் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், பெரும்பாலான விவசாயிகள் மாற்றுத் தொழிலுக்கு மாறி வருகின்றனர். இருப்பினும், பல விவசாயிகள் சார்பு தொழிலான ஆடு, மாடு, எருமை, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

கால்நடை தீவனத்துக்கு மேய்ச்சல் நிலங்களை நம்பி உள்ளனர். பால் உற்பத்தியைப் பெருக்க பயிர் அறுவடை காலங்களில் உலர் தீவனங்களை விலை கொடுத்து வாங்கி இருப்பு வைத்துப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், நடப்பாண்டில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாகக் கால்நடை தீவனத்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், தேன்கனிக்கோட்டை வட்டம் கெலமங்கலம் மற்றும் அஞ்செட்டி வட்டம் உரிகம், கோட்டையூர் பகுதி விவசாயிகள் நாட்டின மாடுகளை விற்பனை செய்து வருகின்றனர்.

இது தொடர்பாக உரிகம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது: மரபணு மாற்றப்பட்ட கலப்பின ஜெர்சி பசு மாடுகள் வரவு அதிகரிப்பால், தமிழகத்தில் நாட்டின மாடுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எங்கள் கிராமத்தில் ஆலம்பாடி, பர்கூர், மயிலை உள்ளிட்ட10-க்கும் மேற்பட்ட நாட்டின ரக மாடுகளை வளர்த்து வருகிறோம். நாட்டின மாடுகளில் 2 லிட்டர் வரை பால் கிடைக்கும். இங்கிருந்து கர்நாடகாவுக்குப் பாலை அனுப்பி வருகிறோம். தற்போது நிலவும் வறட்சி காரணமாக மேய்ச்சல் நிலங்களில் புற்கள் இன்றி தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், மாடுகளை வளர்க்க முடியாமல் பலர் விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்டச் செயலாளர் கணேஷ் ரெட்டி கூறியதாவது: இப்பகுதியில் சுமார் 3.50 லட்சம் கால்நடைகள் உள்ளன. இதில், 1.50 லட்சம் நாட்டின மாடுகள் உள்ளன. வறட்சி காரணமாகத் தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு பால் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் தினசரி 1.50 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்க வேண்டும். மேலும், தற்போதைய தேவைக்குக் கால்நடை வளர்ப்போருக்கு தீவனப்புல் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினர்.

1,552 ஏக்கர் மேய்ச்சல் புறம்போக்கு நிலம் - கால்நடை பராமரிப்புத் துறையினர் கூறியதாவது: தேன்கனிகோட்டை, அஞ்செட்டி வட்டத்தில் 1,552 ஏக்கர் மேய்ச்சல் புறம் போக்கு நிலம் உள்ளது. இந்நிலத்தில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து தீவனப்புல் சாகுபடி செய்து, கால்நடை வளர்ப்போருக்கு வழங்கலாம். மேலும், கால்நடைகளை மேய்ச்சலுக்கும் அனுமதிக்கலாம். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் இதேபோல நிலவிய வறட்சியின் போது, இப்பகுதியில் டெப்போ அமைத்து, கால்நடை வளர்ப்போருக்கு 50 சதவீதம் மானியத்தில் கால்நடை உலர் தீவனம் வழங்கப் பட்டது. தற்போது, தேர்தல் நடைமுறை அமலில் உள்ளதால், தேர்தல் முடிந்த பின்னர் இதற்கான நடவடிக்கை எடுக்க அரசுக்குப் பரிந்துரை செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT