சென்னை: அரசு, தனியார் துறை அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களிடம் வருமான வரிக்கான டிடிஎஸ் தொகையை அதன் நிர்வாகங்கள் பிடித்தம் செய்வது வழக்கமாகும். இந்த தொகையை சம்பளம் வழங்கும் பொறுப்பு அலுவலர் வருமானவரித் துறைக்கு செலுத்தினால் மட்டுமே அத்தொகை சம்பந்தப்பட்ட நபரின் வருமானவரிக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
அந்த வகையில் தமிழக பள்ளிக்கல்வித் துறையில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களிடம் மாதந்தோறும் டிடிஎஸ் பிடித்தம் செய்யும்தொகையை அரசின் கணக்கில் செலுத்திவிட்டு, வருமானவரித் துறைக்கு ரிட்டர்ன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இந்நிலையில் கடந்த நிதியாண்டில் (2023-24) மார்ச் 31-ம் தேதியுடன்நிறைவடைந்தது. இதில் பள்ளிக்கல்வித் துறையில் பிடித்தம் செய்ததொகையை செலுத்தாமல் நிலுவையில் உள்ளதை வருமானவரித் துறை கண்டறிந்துள்ளது. இதையடுத்து சம்பளம் வழங்கும் அலுவலர்களாக உள்ள தலைமை ஆசிரியர்கள், முதன்மை, மாவட்டக் கல்வி அலுவலர்கள் உட்பட 5,563 பேருக்கு வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிடித்தம் செய்த தொகையை விரைவில் செலுத்தி அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உரிய ஆவணங்களுடன் உடனே ரிட்டர்ன் அறிக்கை தாக்கல் செய்ய பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.