சென்னை: அன்றாடம் புதிய உச்சம் காணும் தங்கம் விலை இன்று (ஏப்ரல் 12) ஒரு பவுன் ரூ.54,000-ஐ கடந்தது. நாளுக்கு நாள் இவ்வாறாக அதிகரித்துவரும் தங்கத்தின் விலை, நடுத்தர குடும்பத்தினரை கலக்கமடையச் செய்துள்ளது.
காரணம் என்ன? சர்வதேச பொருளாதார சூழல்,அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு கடுமையாக குறைந்த தங்கம் விலை, இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே அதிகரித்து பல புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது.
சர்வதேச அளவில் பொருளாதார வீழ்ச்சி நீடித்து வருகிறது. இதேபோல் தங்கத்தின் மீதான முதலீடு காரணமாக தேவை அதிகரித்து வருகிறது. உள்ளூர் சந்தையிலும், வெளி சந்தையிலும் மக்கள் போட்டி போட்டு கொண்டு தங்கத்தை வாங்கி வருகின்றனர். இதன் காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. ஒருசில நாட்களுக்கு இதே விலை உயர்வு காணப்படும். வெகு விரைவில் பவுன் தங்கம் ரூ.60 ஆயிரத்தை எட்டும் வாய்ப்பும் இருக்கிறது எனக் கூறப்படுகிறது.
இன்றைய விலை நிலவரம்: இந்நிலையில் சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.640 உயர்ந்து,ஒரு பவுன் ரூ.54,440 என்னும் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,805-க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 1.50 காசு உயர்ந்து ஒரு கிராம் ரூ.90-க்கு விற்கப்படுகிறது.