புதுடெல்லி: இந்தியாவின் பிரபல மோட்டார் வாகன நிறுவனமான மாருதி சுசுகி நிறுவனம், அதன் தயாரிப்பான ஸ்விஃப்ட் காரின் விலையை ரூ.25,000 வரை உயர்த்தியுள்ளது. இந்த விலை ஏற்றம் புதன்கிழமை (ஏப்.10) முதல் அமலுக்கு வந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி மற்றும் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமாக மாருதி சுசுகி அறியப்படுகிறது. இந்திய சாலைகளில் றெக்கை கட்டி பறக்கும் நான்கு சக்கர வாகனங்களில் மாருதி சுசுகி நிறுவன கார்களின் பங்கு கொஞ்சம் அதிகம். பயணிகள் கார் சந்தையில் சுமார் 44 சதவீதத்தை இந்நிறுவனம் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்த விலை ஏற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன் காரணமாக ஸ்விஃப்ட் கார் இப்போது ரூ.5.99 லட்சம் முதல் ரூ.8.89 லட்சம் வரையில் விற்பனை ஆகிறது. இது தலைநகர் டெல்லியின் எக்ஸ்-ஷோரூம் விலை. இதே போல எஸ்யூவி கிராண்ட் விட்டாராவின் சிக்மா வேரியன்ட் காரின் விலை ரூ.19,000 வரை உயர்த்தியுள்ளது. அந்த வகையில் கிராண்ட் விட்டாரா காரின் விலை ரூ.10.8 லட்சமாக (டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை) விற்பனை ஆகிறது.
மறுபக்கம் ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா காரின் முன்பதிவு கடந்த 3 மாத காலத்தில் ஒரு லட்சம் எண்ணிக்கையை கடந்துள்ளது.