ஓசூர்: மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், ஓசூரில் 30 சதவீதம் தொழில் வர்த்தகம் பதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆவணமின்றி ரூ.2 லட்சம் எடுத்துச் செல்ல தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
தொழில் நகரான ஓசூரில் சிறு, குறு மற்றும் பெரிய தொழிற்சாலைகள் என சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உள்ளிட்ட பொருட்கள் கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் வழியாக வடமாநிலங்களுக்குச் செல்கின்றன.
பல கோடி ரூபாய் வர்த்தகம்: இதேபோல, ஓசூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் மலர் மற்றும் காய் கறி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு அறுவடை செய்யப்படும் காய்கறிகள் பத்தளப்பள்ளி காய்கறி சந்தைக்கும், பூக்கள் ஓசூர் மலர் சந்தைக்கும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்குச் செல்கின்றன. மேலும், இத்தொழில்களை அடிப்படையாக கொண்டு பலர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இதனால், ஓசூரில் தினசரி பல கோடி ரூபாய்க்கு தொழில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மக்களவைத் தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் வழங்குவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, அமல்படுத்தியுள்ளது.
ஆவண பரிமாற்றம் இல்லை: குறிப்பாக ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கப் பணம் எடுத்துச் செல்லக் கூடாது என்ற நடை முறையால் சிறு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஓசூர் பகுதி தொழில் வர்த்தகம் அண்டைய மாநிலங்களான கர்நாடகா, ஆந்திர மாநில வர்த்தகத்தை அடிப்படையாக கொண்டு உள்ளது. சிறு வியாபாரத்தில் ஆவண பரிமாற்றங்கள் பெரிதும் இல்லை என்பதால், ஆவணங்களுடன் பணத்தை எடுத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
தேர்தல் ஆணையத்துக்கு வேண்டுகோள்: இது தொடர்பாக ஓசூர் தொழில் வர்த்தக சபைத் தலைவர் வேல்முருகன் கூறியதாவது: தேர்தல் நடத்தை விதிமுறையால் ஓசூரில் 30 சதவீதம் தொழில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஷேர் மார்க்கெட் முதலீடும் பாதிக்கப்பட்டுள்ளது. பெரிய தொழிற் சாலைகளுக்கு பிரச்சினை இல்லை அவர்களுக்கு காசோலை வழங்குகின்றனர். சிறு தொழில் நிறுவனம் நடத்துவோர் அதிகம் பாதிக்கப் பட்டுள்ளனர். அதேபோல, கால்நடை வியாபாரிகள், காய் கறி வியாபாரிகள் எந்த ஆவணங்களை கொண்டு செல்ல முடியும். எனவே, அதிகபட்சம் ரூ. 2 லட்சம் வரை ஆவணமின்றி எடுத்துச் செல்ல தேர்தல் ஆணையம் அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மன உளைச்சலால் பாதிப்பு: இது தொடர்பாக வியாபாரிகள் கூறியதாவது: சிறு வியாபாரிகள் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ஆவணங்களின்றி கொண்டு செல்லும் போது, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைகின்றனர். அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வியாபாரிகள் பல முறை அலைகழிக்கப்படும் நிலையுள்ளது. இதனால், தேவையற்ற மன உளைச்சல் ஏற்படுகிறது. எனவே, தேர்தல் ஆணையம் நடப்பு வர்த்தக சுழற்சி மற்றும் பொருளாதார நிலைக்கு ஏற்ப ஆவணமின்றி கூடுதல் தொகையை எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும். மேலும், சிறு வியாபாரிகள், விவசாயிகள் எந்த வகையான ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற வழி காட்டுதலை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.