வணிகம்

கோவை தொழில் துறையினர் ஆதரவு யாருக்கு? - வெற்றியை தீர்மானிக்கும் குறுந்தொழில் நிறுவனங்கள்

இல.ராஜகோபால்

கோவை: தொழில் நகரான கோவை ஜவுளி, ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், பம்ப்செட், கிரைண்டர், வார்ப்படம், பொறியியல் பொருட்கள் உள்ளிட்ட உற்பத்தித் துறையில் சர்வதேச அளவில் முக்கிய பங்களிப்பை கொண்டுள்ளது. தமிழகம் உட்பட பல்வேறு வட மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இங்கு பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு தேர்தலிலும் கோவையில் வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்வதில் தொழில்துறை மிகமுக்கிய பங்காற்றி வருகிறது.

எதிர்வரும் மக்களவை தேர்தலில் தங்களின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து பல்வேறுஅமைப்புகளை சேர்ந்த தொழில்துறையினர் கருத்துகளை தெரிவித்துள்ளனர். தொழில்துறையினர் கூறியதாவது: தமிழக தொழில் வளர்ச்சியில் எம்எஸ்எம்இ எனப்படும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கோவை மாவட்டத்தில் எம்எஸ்எம்இ உதயம் போர்டலில் மொத்தம் 1,94,075 நிறுவனங்கள் உள்ளன. இதில் 1,87,511 குறுந்தொழில் நிறுவனங்கள், 5,951 சிறு நிறுவனங்கள், 613 நடுத்தர நிறுவனங்கள் ஆகும். இது தவிர பதிவு செய்யாமல் பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

குறுந்தொழில் நிறுவனங்களில் 2.75 லட்சம் பேரும், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் 1.25 லட்சம் பேரும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். 2023-24 நிதியாண்டு கணக்கெடுப்பின்படி கோவை மாவட்ட மொத்த உற்பத்தி (ஜிடிபி) 33 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. தமிழக அரசு அமல்படுத்தியுள்ள மின் கட்டண உயர்வு, 100 சதவீத சொத்து வரி உயர்வு, வணிக வரித்துறை சார்பில் விதிக்கப்படும் கெடுபிடி உள்ளிட்டவை தொழில் துறையினருக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறுபுறம் பெரிய நிறுவனங்களுக்கு சாதகமாக மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜாப் ஒர்க் செய்யும் எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. 5 சதவீதமாக குறைக்க தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்தும் பயன் இல்லை.

விமான நிலையத்தில் சர்வதேச விமான போக்குவரத்து அதிகரிக்க 10 ஆண்டுகளாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது, விமான நிலைய விரிவாக்க திட்டநிலங்களை விமான நிலைய ஆணையகத்திடம் ஒப்படைப்பது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படாதது, ஜவுளித் தொழிலில் பஞ்சுக்கு 11 சதவீத இறக்குமதி வரி ரத்து செய்வது, பாலியஸ்டர், விஸ்கோஸ் செயற்கை இழைகளை இறக்குமதி செய்ய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது, தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைக்காதது ஆகிய மத்திய அரசின்நடவடிக்கைகளால் தொழில் துறையினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை மக்களவை தொகுதியில் பெரிய, நடுத்தர, சிறிய நிறுவனங்கள் வரை பாஜகவுக்கு ஆதரவு அதிகம் உள்ளது. குறுந்தொழில் நிறுவனங்களில் திராவிட கட்சிகளுக்கு ஆதரவு அதிகம் காணப்படுகிறது. வாக்கு சதவீதம் அதிகம் கொண்டுள்ளதால் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக குறுந்தொழில் நிறுவனங்கள் இருக்கும். முதல்வர் கோவை வருகையின்போது தொழில்துறை சார்ந்து அளிக்கும் வாக்குறுதி தேர்தல் களத்தின் தன்மையை முற்றிலும் மாற்றியமைக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு தொழில் துறையினர் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT