அர்விந்த் விர்மானி 
வணிகம்

இந்தியாவின் வளர்ச்சி குறித்த ரகுராம் ராஜன் பார்வை தவறு: நிதி ஆயோக் உறுப்பினர் அர்விந்த் விர்மானி பதில்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருவதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனின் கருத்து முற்றிலும் தவறானது என்று நிதி ஆயோக் உறுப்பினர் அர்விந்த் விர்மானி தெரிவித்துள்ளார்.

ரகுராம் ராஜன் அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “இந்தியப் பொருளாதாரம் வலுவானதாக மாறி வருவதாக கூறப்படும் பரபரப்பு செய்திகளில்உண்மை இல்லை. அதுபோன்றதொரு போலியான பிம்பம் உருவாக்கப்பட்டு பெரிய தவறிழைக்கப்படுகிறது. இந்தியா வலுவான பொருளாதார வளர்ச்சி கருத்தை உண்மையாக்க இன்னும் பல வருட கடின உழைப்பு தேவைப்படுகிறது. முதலில் இந்தியாவின் வளர்ச்சியைஊக்குவிக்க அடிப்படைக் கட்டமைப்பில் உள்ள சிக்கல்கள் சரிசெய்யப்பட வேண்டும்.

குறிப்பாக, கல்வி, தொழிலாளர் திறன் நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். 2024-ல் பொறுப்பேற்கும் புதிய அரசு நிலுவையில் உள்ள இதுபோன்ற பிரச்சினைகளை சீர்செய்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். 2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியா இலக்கு எட்டப்பட வாய்ப்பில்லை. இடைநிற்றல் விகிதம் அதிகரிப்பு மற்றும் உங்கள் குழந்தைகளில் பலருக்கு உயர்கல்வி இல்லை என்ற நிலை இன்னும் உள்ளபோது வளர்ச்சி இலக்கைப் பற்றி பேசுவது முட்டாள்தனம்" என்று கூறியிருந்தார்.

இது, பொருளாதார வல்லுநர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நிதி ஆயோக் உறுப்பினரும், பொருளாதார நிபுணருமான அர்விந்த் விர்மானி கூறுகையில், “ரகுராம் ராஜனின் கருத்து இந்தியாவைப் பற்றிஇதுவரை தெரியாதவர்கள் கூறுவது போல் உள்ளது. எனவே, இதனை ஏற்க முடியாது. இந்தியா பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருவதை உலகமே கவனித்து வருகிறது" என்றார்.

இதனிடையே, மணிபால் குளோபல் எஜுகேஷன் தலைவர் மோகன்தாஸ் பாய் கூறும்போது, “ரகுராம் ராஜனின் வாதங்கள் வெறுமையானது. இந்தியாவின் அடிப்படை யாதர்த்தத்துடன் அதுபொருந்தவில்லை. அவர் கூறுவதற்கு மாறாக, பள்ளி இடைநிற்றல் விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. அதேபோன்று, உயர்கல்விக்கான கல்லூரி சேர்க்கையும் அதிகரித்துள்ளது. வேலை வாய்ப்புகள் அதிகளவில் உருவாக்கப்பட்டுள்ளன" என்றார்.

SCROLL FOR NEXT