வதோதரா: குஜராத் மாநிலத்தை தலைமையகமாகக் கொண்ட, குஜராத் கூட்டுறவு பால் சந்தை கூட்டமைப்பு, அமுல் என்ற பெயரில் பால் மற்றும் பால் பொருட்களை இந்தியா முழுவதும் சந்தைப்படுத்தி வருகிறது. இதன் சுவைகாரணமாக இந்தியாவில் பிரபலமான பிராண்டாக அமுல் விளங்குகிறது. ‘டேஸ்ட் ஆப் இந்தியா’ என போற்றப்படுகிறது.
இதுகுறித்து அமுல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெயன் மேத்தா கூறியதாவது: அமுல் பால் பொருட்கள் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இதற்காக 108 ஆண்டுகள் பழமையான அமெரிக்காவின் மிச்சிகன் பால் பொருட்கள் சங்கத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளோம்.
சமீபத்தில் நடைபெற்ற அமுல் நிறுவனத்தின் வெள்ளி விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, உலகின் மிகப்பெரிய பால்பொருள் தயாரிப்பு நிறுவனமாக அமுல் உருவெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கேற்ப, உலக அளவில் எங்கள் தயாரிப்புகளை கொண்டு போய் சேர்க்கும் முயற்சியில் இறங்கி உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.