வணிகம்

நடமாடும் வாகனம் மூலமாக ஐஸ்கிரீம் விற்பனையை அதிகரிக்க ஆவின் திட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், நடமாடும் வாகனம் ( புஸ்கார்ட் வாகனம் ) மூலமாக, மோர், லஸ்ஸி, ஐஸ்கிரீம் உள்ளிட்ட விற்பனையை அதிகரிக்க ஆவின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யும் பணியில் தமிழ்நாடு கூட்டுறவுபால் உற்பத்தியாளர் இணையம் ( ஆவின் நிர்வாகம் ) ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் வாயிலாக, 200-க்கும் மேற்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது, கோடை காலம் தொடங்கி இருப்பதால், மோர்,லஸ்ஸி, ஐஸ்கிரீம் உள்ளிட்ட விற்பனையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இவற்றின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, நடமாடும் வாகனம் ( புஸ்கார்ட் வாகனம் ) மூலமாக, ஐஸ்கிரீம், லஸ்ஸி, மோர் ஆகியவற்றின் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: இந்த கோடை காலத்தில் ஆவின் மோர், லஸ்ஸி, ஐஸ்கிரீம் ஆகியவற்றின் விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டு இருக்கிறோம். உற்பத்தியை அதிகரிக்க தேவையான மேம்பாட்டுப் பணிகளை செய்து இருக்கிறோம்.

விற்பனை அதிகரிப்பின் ஒருபகுதியாக, புஸ்கார்ட் என்னும் நடமாடும் வாகனங்கள் மூலமாக, ஐஸ்கிரீம் விற்பனை செய்ய உள்ளோம். சென்னையில் முக்கிய இடங்களில் 20-க்கும் மேற்பட்ட புஸ்கார்ட் வாகனங்கள் மூலமாக விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வாகனங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்து உள்ளோம்.

பொது மக்கள் கூடும் முக்கிய இடங்களில் ஆவின் பாலகங்கள், விற்பனை நிலையங்கள் வழக்கம் போல செயல்பட்டாலும், மக்கள் இருக்கும் இடத்துக்கு நேரடியாக சென்று அவர்கள் விரும்பி பருகும், சாப்பிடும் ஆவின் பொருள்களை வழங்க நடவடிக்கை எடுத்து உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT