வேர் உட்பூசணத்தின் மூலம் பயிர்களின் வளர்ச்சி துரிதமாவதோடு, மண்ணின் உயிர்த் தன்மையும் மேம்படுத்தப்படும் என ஈரோடு மாவட்ட வேளாண் அறிவியல் நிலையத்தின் உழவியல் தொழில்நுட்ப வல்லுநர் ச.சரவணக்குமார் கூறுகிறார்.
வேர் உட்பூசணம் என்பது வேர்களின் உள்ளே சென்று பயிர் வளர்ச்சியின் செயல்பாட்டுடன் நேரடியாக தொடர்பு கொண்டு பயிர்களுக்குத் தேவையான நீர் மற்றும் நுண்ணூட்டச் சத்துகளை (மணிச்சத்து, துத்தநாகம், தாமிரம்) எளிதாக பயிர்கள் எடுத்துக்கொள்ள உதவுகின்றன. இந்த வேர் உட்பூசணத்தை அதிக அளவில் உற்பத்தி செய்வதற்கு சோளம் அல்லது மக்காச்சோளம் போன்ற பயிர்களின் வேர்களில் வளரவிட வேண்டும்.
பயன்படுத்தும் முறைகள்:
மண்ணில் நன்கு ஈரப்பதம் இருக்கும் பொழுது பயிர்களின் வேர்ப்பகுதிக்கு அருகில் இந்த வேர்ப்பூசணத்தை பயிர்களுக்கு 50 கிராம் வீதமும், பெரிய மரங்களுக்கு 200 கிராம் வீதமும் பயன்படுத்தலாம்.
ஒருசதுர மீட்டர் நாற்றங்கால் நிலப்பரப்புக்கு 100 கிராம் வேர் உட்பூசணம் போதுமானது. விதைப்பதற்கு முன் நாற்றங்காலில் மண்ணிற்கு கீழே 5 முதல் 6 செ.மீ. ஆழத்தில் இட வேண்டும்.
சிறப்பு அம்சங்கள்:
# வேர்களுக்கு மண்ணில் இருந்து நீரை துரிதமாக கொண்டு செல்கின்றன.
# வேர் உட்பூசணங்கள் வேரைத் தாக்கும் நோய் மற்றும் நூற்புழுக்களின் தாக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது.
# மணிச்சத்தின் உரச் செலவில் 25 சதவிகிதம் குறைக்கப்படுகின்றன.
# 10 முதல் 15 சதவிகித மகசூல் அதிகரிக்க உதவுகிறது.
தொடர்புக்கு: 98653 66075.