ஈரோடு: தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக மொத்த கொள்முதல் செய்ய வெளிமாநில ஜவுளி வியாபாரிகள் வராததால் ஈரோடு ஜவுளிச்சந்தையில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா, சென்ட்ரல் தியேட்டர், அசோகபுரம் ஆகிய பகுதிகளில் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க் கிழமை மாலை வரை வார ஜவுளிச் சந்தை நடக்கிறது. இந்த சந்தைக்கு வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள், மொத்தக் கொள்முதல் செய்வது வழக்கம். இந்த வாரச்சந்தையில் சாதாரண நாட்களில் ரூ.2 கோடிக்கும், பண்டிகைக் காலங்களில் ரூ.5 கோடிக்கும் விற்பனை நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகளால், ஈரோடு ஜவுளிச் சந்தை வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்படும் என்பதால், வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட வியாபாரிகள் வருகை குறைந்து, விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.
ரொக்க கொள்முதல் முறை: இது குறித்து ஜவுளி வியாபாரிகள் கூறியதாவது: ஈரோடு ஜவுளிச் சந்தையில் விலை குறைவாக கிடைக்கும் என்பதால், வெளிமாநில, வெளி மாவட்ட வியாபாரிகள் மொத்த கொள்முதல் செய்ய வருவது வழக்கம். பொதுவாக, ஜவுளிச்சந்தையில் ரொக்க கொள்முதல் செய்வதையே இரு தரப்பினரும் விரும்புவதால், ஜவுளிச்சந்தை நடக்கும் நாட்களில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். குறைந்த பட்சம் ரூ.2 லட்சம் முதல், ரூ.15 லட்சம் வரை ரொக்கமாக கொண்டு வந்து மொத்தமாக ஜவுளி கொள்முதல் செய்வார்கள்.
தற்போது ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு வந்தால், தேர்தல் பறக்கும்படையால் பறிமுதல் செய்யப்படும் சூழல் உள்ளது. எனவே, இந்த வார சந்தைக்கு வியாபாரிகள் வருகை வெகுவாக குறைந்து மொத்த ஜவுளி விற்பனை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடியும் வரை ஜவுளிச்சந்தைக்கு இந்த பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, ஜவுளிச் சந்தைக்கு வரும் வியாபாரிகளுக்கு விலக்கு அளிக்க தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும், என்றனர்.
மருத்துவச் செலவு பணம் பறிமுதல்: இதனிடையே, சத்தியமங்கலம் அருகே கோட்டுப்பள்ளத்தில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளியின் மருத்துவச் செலவுக்காக ரூ.47 ஆயிரத்தை கொண்டு சென்றவரிடமிருந்து பறக்கும்படையினர் பணத்தை பறிமுதல் செய்தனர். இதனால் ஆவேசமடைந்த அவரது உறவினர்கள் வட்டாட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து பணம் திருப்பி அளிக்கப்பட்டது.
தாளவாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காய்கறி வாங்கவும், விற்கவும் வரும் வியாபாரிகளிடம் பறக்கும் படையினர் ஆவணங்களைக் கேட்டு வருவதால், அவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு வந்தால், தேர்தல் பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்படும் சூழல் உள்ளது.