பொதுத்துறை வங்கிகளின் நிர்வாகம் மேம்பட வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். சமீபத்தில் வங்கித்துறையில் நடந்த சில நிகழ்வுகளுக்கு பிறகு நிதி அமைச்சர் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
சில நாட்களுக்கு முன்பு வங்கித்துறையில் நடத்தது மன வருத்தத்தை அளிக்கிறது. இத்தகைய நிகழ்வு பெருங்கடலில் கலந்த ஒரு சிறு துளி என்றே நம்புகிறேன் என்று புதுடெல்லியில் நடந்த இந்தியன் வங்கி விழாவில் தெரிவித்தார். வங்கித்துறையில் நம்பிக்கை என்பது மிகவும் முக்கியமாகும். பொதுத்துறை வங்கிகளில் தொடர்ந்து தங்களது தரத்தினை மேம்படுத்தி மக்களுக்கு நம்பிக் கையை அதிகரிக்க வேண்டும் என்றார்.
2007-08ம் ஆண்டு அமெரிக் காவில் நடந்த சப் பிரைம் பிரச்சி னையால் இந்தியாவில் எந்தவிதமான பாதிப்பு இல்லை. இதற்கு நம்முடைய பாரம் பரியமும், தொழில் நேர்த்தியும் தான் காரணம் என்றார்.
இந்த விழாவில் இந்தியன் வங்கியின் 108 கிளைகளையும் 108 ஏடிஎம்களையும் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி திறந்துவைத்தார்.
வளர்ச்சி 5.8%: அர்விந்த் மாயாராம்
நடப்பு நிதி ஆண்டின் வளர்ச்சி 5.8 சதவீதமாக இருக்கும் என்று நம்புவதாக நிதித்துறை செயலாளார் அர்விந்த் மாயாராம் அசோசேம் விழாவில் தெரிவித்தார். கட்டுமானத்துறையில் வளர்ச் சிக்கான அறிகுறிகள் தெளிவாக தெரிகிறது. மேலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கிடைக்கும் ஆர்டர்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றார் அவர்.
பணவீக்கம் குறைந்து வரும் சூழ்நிலையில் ரிசர்வ் வங்கி நீண்ட நாட்களுக்கு வட்டி விகிதத்தை அதிகமாக வைத்திருக்காது என்றும் அவர் தெரிவித்தார். கூடிய விரைவில் ரிசர்வ் வங்கிக்கு தேவையான அளவு பணவீக்கம் குறையும் என்று அவர் தெரிவித்தார்.
அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில் அரசின் மானிய செலவுகள் கணிசமாக குறையும் என்றார். நடப்பு நிதி ஆண்டுக்காக நடப்பு கணக்கு பற்றாக்குறை 2.5 சதவீதத்துக்குள் இருக்கும் என்றார்.
தங்க இறக்குமதி கட்டுப்பாடு குறித்து பேசிய மாயாராம் இது மேலும் தொடரும் என்று தெரிவித்தார். சூழ்நிலை சாதகமாக மாறும் வரையில் இது தொடரும் என்றார். ஏற்றுமதி மூலம் அதிக வருமானம் கிடைக்கும் போது தங்கத்தை அதிகமாக இறக்குமதி செய்து கொள்ளலாம் என்றார். அரசாங்கத்தின் 80:20 தங்க இறக்குமதி திட்டம் சரியாக செயல்பட்டு வருகிறது. இப்போதைக்கு இதில் எதுவும் செய்யத்தேவை இல்லை.
கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் சூழ்நிலையில் டீசல் விலையை விரைவில் சந்தை தீர்மானிக்கும் சூழ்நிலை வரும் என்றார். தற்போது மாதம் லிட்டருக்கு 50 பைசா விலை உயர்த்தப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை குறைவது நமக்கு அதிர்ஷ்டம். அதனால் டீசலுக்கு கொடுக்கப்படும் மானி யம் குறைக்கப்பட்டு விரைவில் சந்தை நிர்ணயம் செய்யும் நிலைக்கு வரும் என்றார்.
கச்சா எண்ணெய் விலை 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்திருப்பது குறிப்பிடத் தக்கது.