டாடா நிறுவனமும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் (எஸ்ஐஏ) இணைந்து உருவாக்கியுள்ள ஏர்லைன்ஸுக்கு விஸ்தாரா என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிறுவன விமானம் அக்டோபர் மாதம் தனது செயல்பாட்டைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோ, விமான பணியாளர்களுக்கான சீருடை உள்ளிட்டவை திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. விஸ்தாரா என்பது சமஸ்கிருத மொழியில் விஸ்தார் என்பதிலிருந்து உருவானது. இதற்கு எல்லையில்லாதது என்று பொருள். 8 புள்ளிகளைக் கொண்ட நட்சத்திரம் கொண்ட லோகோ கணித குறியீடாகும்.
அதாவது சேவையில் உச்ச பட்ச சேவையை அளிப்பதை உறுதி செய்வதாகும். நிறுவனத்தின் தலைமையிடம் டெல்லியில் இயங்கும். முதல் கட்டமாக ஏர்பஸ் ஏ320-200 ரக விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளது. ஐந்தாண் டுகளில் நிறுவனம் 20 விமானங் களுடன் செயல்பட இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்தியாவில் விமான பயண அனுபவத்தை முற்றிலுமாக விஸ்தாரா மாற்றியமைக்கும் என்று நிறுவனத்தின் தலைவர் பிரசாத் மேனன் குறிப்பிட்டார். பணியாளர்களுக்கான சீருடை யை பிரபல வடிவமைப்பாளர்கள் ஆப்ரஹாம் மற்றும் தாகோர் உருவாக்கியுள்ளனர்.
டாடா மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூட்டு நிறுவனத்தில் டாடா நிறுவனத்துக்கு 51 சதவீத பங்குகளும், சிங்கப்பூர் ஏர்லைன் ஸுக்கு 49 சதவீத பங்குகளும் இருக்கும். வாரத்துக்கு 87 விமான சேவைகளை முதல் ஆண்டிலும் அடுத்த ஆண்டில் இதை இரு மடங்காக உயர்த்தவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்று பிரசாத் மேனன் தெரிவித்தார்.
உள்நாட்டு சேவையைத் தொடர்ந்து வெளிநாடுகளுக்கும் சேவையை விரிவுபடுத்த உள்ளது விஸ்தாரா.